ஆப்நகரம்

ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 21 : ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி

பாவை பாடல்கள் எனப்படும் திருப்பாவை பாசுரங்களில் கண்ணனின் பெருமைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரங்களில் விளக்கி, அந்த கண்ணனின் அருளை பெற வருமாறு அனைவரையும் அழைக்கிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் நாச்சியார். அனைவரையும் அழைத்துக் கொண்டு கண்ணனின் வீட்டிற்கு சென்று, அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்கிறார். ஆனாலும் கண்ணன் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளவில்லை. இதனால் நப்பினையை எழுப்பி அவர் மூலமாக கண்ணனை எழுப்ப முயற்சிக்கிறாள்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 5 Jan 2024, 6:28 pm
திருப்பாவையின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொருவராக எழுப்பி, கடைசியாக கண்ணனின் மனைவியாக நப்பின்னையை எழுப்பி, அவரின் அருளை பெற முயற்சி செய்கிறார் ஆண்டாள். நப்பின்னையின் அழகை புகழ்ந்து பாடி, கண்ணனை எழுப்ப எங்களுக்கு உதவி செய். நாங்கள் கண்ணனின் அருளை பெற வேண்டும். அதனால் அவரை எழுப்பி, எங்களுடன் அனுப்பி வை என கேட்கிறார். அதுவும் முடியாமல் போனதால் தனது 21 ஆம் நாள் பாடலில் கண்ணனிடம் முழுமையாக சரணடைவதே அவனை நம் வசப்படுத்தும் ஒரே வழி என கண்ணனை சரணடைவது பற்றி விளக்குகிறார்.
Samayam Tamil ram


திருப்பாவை பாசுரம் 21 :

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், கள்ளக்குறிச்சி - 108 திவ்ய தேசம் 42வது கோவில்

பொருள் :

கொண்டு வரும் பாத்திரத்தின் அளவிற்கு ஏற்ப வள்ளலை போன்று தாராளமாக பால் சுரக்கும் மாடுகளை தனக்கு சொந்தமாகக் கொண்ட நந்த கோபாலனின் மகனே கண்ணா...இத்தகைய பெருமைகளை கொண்டவரின் மகனே உன்னிடம் ஒன்றை சொல்ல வந்துள்ளோம். சூரியனின் ஒளி தான் பெரியது என அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை விடவும் பெரியது உனது அருள் ஒளி. உலகிற்கே கருணையினால் ஒளி தர வேண்டிய நீயே இப்படி தூங்கலாமா?

புத்தாண்டின் முதல் பிரதோஷம் : எப்படி வழிபாட்டை துவங்குவது?

சூரியனை விட பெரிதாக அருள் ஒளியை உலகம் முழுவதும் பாய்ச்ச கூடிய பெரியனே. உன்னை எதிர்க்கின்றவர்கரையும் பயந்து, அடிபணிய வைத்து, உனது வாசலில் வந்து காத்துக் கிடக்க வைக்கின்றவனே. உன்னை தவிர சரணடைய வேறு யாருமில்லை. இனியும் உன் அருளை பெற காத்திருக்க முடியாது என நாங்களும் உன் வாசலில் வந்து காத்துக் கிடக்கின்றோம். நீயே கதியென்று உன்னை சரணடைய வந்துள்ளோம். எங்களுக்கு உன்னுடைய அருளை தந்தருள வேண்டும்.

விளக்கம் :

இறைவனின் அருளை பெறுவது சாதாரணமான விஷயம் கிடையாது. வெறும் வார்த்தையால் இறைவனிடம் வேண்டினால் அவனின் அருள் கிடைத்து விடாது. இறைவனின் அருளை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால் அவனை முழுவதுமாக சரணடைவது ஒன்றே வழி என்பதை உணர்ந்து, இறைவனிடம் முழுவதுமாக சரணடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் ஆண்டாள். நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்து விட்டால், பிறகு நமக்கு வேண்டியதை செய்து, நம்முடைய துன்பங்களை போக்க வேண்டியது இறைவனின் பொறுப்பு என்பதை இங்கு தெளிவு படுத்துகிறார் ஆண்டாள் நாச்சியார்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்