ஆப்நகரம்

மார்கழி திருவெம்பாவை பாடல் 08 - கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

சிவபெருமானை பற்றி எத்தனையோ அடியார்கள் எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாசுரங்களையும், திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களையும் மட்டுமே மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில் நாம் பாடுகிறோம். இறைவனின் பெருமைகளுடன், மனிதர்கள் இறைவனின் பெருமையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் விளக்கி உள்ளார்.

Authored byமோகன பிரியா | Samayam Tamil 23 Dec 2023, 4:33 pm
உலக உயிர்கள் அனைத்தும் உலகியல் இன்பங்கள், சுகங்களில் ஆழ்ந்து கிடக்கின்றன. ஆனால் இந்த மனித பிறவி எடுத்ததே இறைவனை வணங்கி, அவரது திருவடிகளை அடைவதற்காக தான். இந்த உண்மையை, புண்ணியம் தரும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் தூங்குவது முக்கியம் அல்ல. நமக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளை சரணடைந்து, அவரை போற்றி பாட வேண்டும் என்பதையே திருவெம்பாவை பாடல்கள் உணர்த்துகின்றன.
Samayam Tamil Shiva lingam


திருவெம்பாவை பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள் :

என் அருமை தோழியே! கோழிகள் எழுந்து கூவ ஆரம்பித்து விட்டன. சேவல்களும் கூவ தயாராகி விட்டன. கோழி இனமே தங்களின் வேலையை செய்ய தயாராகி விட்டன. அந்த சத்தம் உனக்கு கேட்கவில்லையா? ஏழு ஸ்வரங்களை வெண்சங்கு உள்ளிட்ட இசை கருவிகளில் இசைத்த படி அடியார் கூட்டம் திருவண்ணாமலை கோவில் நோக்கி போய் கொண்டிருக்கிறதே, அந்த சத்தம் கூட உன்னுடைய காதில் கேட்கவில்லையா? பெண்ணே இது என்ன தூக்கம்? வாய் திறந்து ஏதாவது பதில் சொல்.

சூரியனின் ஒளி பரவத் துவங்கியதும் எப்படி இருள் மறைந்து போகிறதோ அதே போல் இறைவனின் பெரும் கருணை, அருள் நம்முடைய மனத்தில் படத் துவங்கி விட்டால் நம்முடைய அறியாமை என்னும் இருள் விலகி விடுமே. அந்த மாயை இருள் இன்னும் உன்னை விட்டு விலகவில்லையா? இத்தனை சத்ததிலும் உன்னுடைய தூக்கம் கலையவில்லையென்றால் உன்னுடைய வாழ்க என பொய் கோபத்துடன் கூறுகிறாள். மேலும் உலகத்திற்கே தலைவனாக வணங்கக் கூடிய இறைவன் ஒருவனே. அவன் தன்னுடைய அருளை வேண்டும் ஏழைகளான அடியார்களுக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறான். அவனை துதித்து எழுந்து வா பெண்ணே.

விளக்கம் :

நேற்றைய பாடலில் சிவ சின்னங்கள் பற்றி கூறிய மாணிக்கவாசகர் இன்றும் கேழில் விழுப்பொருள்கள் என்ற வார்த்தையை குறிப்பிடுகிறார். சிவம் எப்படி உயர்வானதோ அதே போல் சிவ சின்னங்களும் உயர்வானவை. அவற்றை விட சிவனின் கருணையும், சிவனும் உயர்வானவை. அதை விட உயர்வானது ஏதாவது உண்டா என்றால் உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை எதுவும் இல்லை. சிவச்சின்னங்கள், சிவனடியார்கள், நாயன்மார்கள் இவற்றை பற்றிய கதைகள் எல்லாம் எதற்காக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் சொன்னார்கள்? இவர்கள் எல்லாம் எப்படி கடுமையான துன்பம் வந்த போதெல்லாம் உறுதியாக நின்று, இறைவனின் திருவடிகளை பிடித்து, அந்த துன்பங்களில் இருந்து மீண்டு வந்தார்களோ அதே போல் துன்பம் வரும் காலங்களில் நம்மை காப்பதற்கு இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன், நாமும் இறைவனின் திருவடிகளை சரணடைய வேண்டும் என அனைவருக்கும் உணர்த்துவதற்காக தான் மாணிக்கவாசகர் இந்த பாடலில் விளக்கி உள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மோகன பிரியா
நான் மோகனப்பிரியா முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளேன். கடந்த 14 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். அரசியல், சினிமா, நடப்பு நிகழ்வுகள், வர்த்தகம், ஆன்மிகம் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. விளையாட்டு, அறிவியல், செய்திகள், கலைகள் மீதும் ஆர்வம் அதிகம். தற்போது Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்