ஆப்நகரம்

மயிலை கோலவிழியம்மனுக்கு கும்பாபிஷேகம்!

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீகோலவிழி அம்மன் ஆலயம். மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட சக்தி வாய்ந்த ஆலயம் இது!

TOI Contributor 11 Mar 2016, 4:40 pm
சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீகோலவிழி அம்மன் ஆலயம். மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட சக்தி வாய்ந்த ஆலயம் இது!
Samayam Tamil kolavizhiyamman kumbhaabhishekam mylapore
மயிலை கோலவிழியம்மனுக்கு கும்பாபிஷேகம்!

விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என தொன்மையான திருத்தலம் இது. இந்தக் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, இனிதே நடந்தேறியது கும்பாபிஷேகப் பெருவிழா!
கோலவிழியம்மன் கோயில் பெருமைகளை இந்த நாளில் பார்ப்போம்.
இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்ஸவர் சிலை உள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்கின்றனர்.
தட்சனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோயிலுக்கு மேற்கே அமைந்துள்ளது.
வடக்கு திசை நோக்கியுள்ள சிறிய வாசலில் நுழைந்ததும் ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஅரசரடி விநாயகர், ஸ்ரீசப்தமாதர்கள், ஸ்ரீபாலமுருகன் ஆகியோர் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாக அமர்ந்த கோலத்தில் கோலவிழி அம்மனும் அற்புதமாகக் காட்சி தருகிறார்கள்!
அம்மனின் இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எட்டுக் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எட்டுக் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அம்மன் காட்சி தருகிறாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக குடிகொண்டிருக்கிறாள் கோலவிழி அம்மன்!
எல்லாவற்றுக்கும் மேலாக மயிலாப்பூரின் எல்லைத் தெய்வமாகத் திகழும் ஸ்ரீகோலவிழியம்மனுக்கு, கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் சிறப்புற நடைபெற்றன. இன்று காலை கும்பாபிஷேக விழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இனிதே நடைபெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்