ஆப்நகரம்

மதுரையில் இன்று கள்ளழகருக்கு எதிர்சேவை வழங்கும் நிகழ்ச்சி!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, அழகர் மலையிலிருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று எதிர்சேவை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 29 Apr 2018, 10:54 am
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, அழகர் மலையிலிருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று எதிர்சேவை செய்து வருகின்றனர்.
Samayam Tamil kala
மதுரையில் இன்று கள்ளழகருக்கு எதிர்சேவை வழங்கும் நிகழ்ச்சி!

மதுரை அழகர் சுந்தரராஜப்பெருமாள் கோயில் விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இந்த சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அழகர் கோவிலில் இருந்து கள்ளர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் புறப்பட்ட அழகர், வரும் வழியில் ஒவ்வொரு மண்டகப்படியாக சென்று அருள் பாலித்தார்.

மதுரையில் இன்று கள்ளழகருக்கு எதிர்சேவை வழங்கும் நிகழ்ச்சி!

இன்று காலை மதுரை சுந்தராஜன்பட்டி, கடச்சனேந்தல் வந்த கள்ளழகருக்கு மண்டகப் படிகளில் நைவேத்தியங்கள், பட்டு பரிவட்டம் சார்த்தப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா முழக்கத்துடன் எதிர் சேவை செய்து அழகரை வரவேற்றனர்.

காலை 9 மணிக்கு மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. தொடர்ந்து புதூர் வழியாக செல்லும் அழகர், தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இளைப்பாறுகிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை தங்கக் குதிரையில் புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்