ஆப்நகரம்

அழகர் ஆற்றில் இறங்க தயாராகி வரும் மதுரை நகரம்!

மதுரையில் உலகப் புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கொடியேற்றம், சிறப்பு பூஜைகள், உத்ஸவங்கள், கொண்டாட்டங்கள் என எங்கு திரும்பினாலும் ஆட்டமும் பாட்டமுமாக தயாராகி வருகிறது மதுரை மாநகரம் என்று குதுகலத்துடன் தெரிவிக்கிறார்கள் மக்கள்!

TOI Contributor 8 Apr 2016, 3:28 pm
மதுரையில் உலகப் புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கொடியேற்றம், சிறப்பு பூஜைகள், உத்ஸவங்கள், கொண்டாட்டங்கள் என எங்கு திரும்பினாலும் ஆட்டமும் பாட்டமுமாக தயாராகி வருகிறது மதுரை மாநகரம் என்று குதுகலத்துடன் தெரிவிக்கிறார்கள் மக்கள்!
Samayam Tamil madurai is getting ready for azhagar festival
அழகர் ஆற்றில் இறங்க தயாராகி வரும் மதுரை நகரம்!

மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலையும் மாலையும் தல்லாகுளம் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் மற்றும் அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயில்களை இணைத்து சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. ஆரம்பத்தில், தனித்தனியே இந்த இரண்டு விழாக்களும் நடந்து வந்தது என்றும் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்து இந்த இரண்டு விழாக்களும் சைவ வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சேர்ந்தே நடந்து வருவதாகவும் தெரிவிக்கிறது வரலாறு.
அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். அந்த நிகழ்ச்சியின்போது தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி ஆலயத்தில், கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். இந்த நிகழ்வை தரிசிக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அந்த நள்ளிரவு வேளையிலும் கலந்து கொண்டு சிலிர்ப்பார்கள்.
இதையொட்டி, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு, திருக்கோயில் பிரதான வாயில் முன்புறம் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
இதையடுத்து, திருவிழா குறித்த அழைப்பிதழ்களை முறைப்படி அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டகப்படியில் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர்மலையிலிருந்து கள்ளழகர் வரும் 20-ம் தேதி மாலை மதுரை நோக்கி புறப்படுகிறார். அவருடன் 23 வாகனங்களில் தீர்த்தம், உண்டியல்கள் முதலானவை கொண்டுவரப்படுகின்றன.
அன்றைய தினம் காலை மூன்றுமாவடியிலும், மாலையில் மாநகராட்சி அண்ணா மாளிகைப் பகுதியிலும் கள்ளழகருக்கு எதிர்சேவை வரவேற்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அன்று இரவு விடிய விடிய தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலைச் சுற்றிலும் பக்தர்கள் அழகரை வரவேற்பார்கள்.
அழகர்மலையிலிருந்து மதுரை வரும் வழியில் 400 க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டபங்களில் அருள்பாலிப்பார். வெள்ளிக்கிழமை 22&ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கிறார்.
இதையடுத்து சனிக்கிழமை 23&ம் தேதி காலை தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தும், இரவில் தசாவதாரக் கோலத்திலும் கள்ளழகர் சேவை சாதிப்பார்.
ஞாயிற்றுக்கிழமை 24&ம் தேதி காலை ராமராயர் மண்டகப்படியிலிருந்து ராஜாங்க திருக்கோலத்தில் புறப்பாடாகும் கள்ளழகர், அன்று இரவில் தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிக் காட்சி தருவார்.
அங்கு பூப்பல்லக்கில் எழுந்தருளும் அவர் 25&ம் தேதியான திங்கட்கிழமை காலை அழகர்மலைக்கு புறப்பாடு செய்வார். வழிநெடுக பக்தர்களுக்கு தரிசனம் தரும் கள்ளழகர் 27&ம் தேதி புதன்கிழமை அழகர்மலையை வந்தடைகிறார்.
மதுரையும் மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களும் இப்போதே சித்திரைத் திருவிழா குதுகலத்துக்குத் தயாராகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்