ஆப்நகரம்

பள்ளிக்காக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தும் மாணவிகள்..!

தங்களது பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கோரி ஹரியானாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றின் மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 18 May 2017, 1:28 am
தங்களது பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கோரி ஹரியானாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றின் மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil girl students started hunger strike for high school in their village
பள்ளிக்காக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தும் மாணவிகள்..!


ஹரியானா மாநிலத்தில் உள்ள தோகானா என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை சொல்லித்தரப்படுகிறது. 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்க வேண்டுமென்றால், தோகானா கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குதான் செல்ல வேண்டிய சூழல் இருந்தது.

மேல்நிலைப்பள்ளிக்கு செல்வதற்காக 3 கி.மீட்டர் தூரம் ஆள் அரவமற்ற சாலை வழியாக பயணிக்கும் தோகானா கிராம மாணவிகள், அடையாளம் தெரியாத சில நபர்களால் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாகி வந்தனர். இதனால் சில மாணவிகளின் பள்ளிப்படிப்பைக் கூட, அவர்களின் குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர். எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, தோகானா கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அக்கிராம மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை குறைவாக இருப்பதாக கூறி, மக்களின் கோரிக்கையை ஹரியானா மாநில அரசு நிராகரித்து வந்தது. இதனால் பொறுமை இழந்த தோகானா கிராம மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

கடந்த எட்டு நாட்களாக இந்த உண்ணாவிரத போராட்டம் பள்ளி வளாகத்திற்கு அருகிலேயே நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தினால் சில மாணவிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என மாணவிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். இதனால் ஹரியானா பள்ளிக் கல்வித்துறை சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

Girl students started hunger strike for High school in their village

அடுத்த செய்தி