ஆப்நகரம்

கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு நோய்த்தொற்று

கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 21 Aug 2018, 5:28 pm
சென்னை: கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil geetha_child_11289


கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று, சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது.

அக்குழந்தையை துணை நடிகை கீதா மீட்டார். சுதந்திர தினத்தில் பிறந்தால் சுதந்திரம் என்று பெயரிட்டு, முதலுதவி அளிக்க எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக குழந்தை சுதந்திரத்திற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உடல்நலம் மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். கால்வாயில் இருந்த கிருமிகளால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பால் வங்கியிலிருந்து குழந்தைக்கு தினமும் பால் கொடுக்கப்படுகிறது. குழந்தையைப் பார்க்க அதிக பார்வையாளர்கள் வரத்தொடங்கியதால் யாருக்கும் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என் மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர். குழந்தையைக் காப்பாற்றிய நடிகை கீதாவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

அடிக்கடி சுதந்திரத்தைச் சந்தித்து வரும் கீதா, குழந்தை விரைவில் நலம்பெற்று திரும்ப வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக கண்ணீருடன் கூறுகிறார். விரைவில் சுதந்திரம் பூரண குணமடைய மருத்துவர்கள் முழு கவனத்துடன் கவனித்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வளசரவாக்கம் போலீசார் குழந்தையின் பெற்றோர் யார் என விசாரித்ததில் எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை.

அடுத்த செய்தி