ஆப்நகரம்

அரை கிளாஸ் தண்ணீரில் 50 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம்!

புனேயில் உள்ள உணவகங்கள் தண்ணீர் சிக்கனத்துக்காக வாடிக்கையாளர்களுக்கு அரை கிளாஸ் தண்ணீர் மட்டும் வழங்குகின்றன.

Samayam Tamil 10 Dec 2018, 12:42 pm
உணவங்களில் தண்ணீர் குடிப்பவர்கள் பெரும்பாலும் டம்ளரில் சிறிதளவு தண்ணீரை மிச்சம் வைத்துவிடுகின்றனர். அந்தத் தண்ணீர் எப்போதும் வீணாகத்தான் செய்கிறது. இவ்வாறு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது.
Samayam Tamil rawpixel-687066-unsplash


இதனைத் தவிர்க்கும் நோக்கில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ரெஸ்டாரண்டுகள் இணைந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் வழங்கும்போது டம்பளரில் பாதியை மட்டும் நிரப்பி வழங்குவது என்று முடிவு செய்துள்ளன. புனே ரெஸ்டாரண்டுகள் மற்றும் ஹோட்டல்கள் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனையடுத்து புனேயில் பல உணவகங்களில் தண்ணீர் கொடுக்கும்போது அரை கிளாஸ் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. தண்ணீர் வீணாவதைக் குறைக்கும் இந்த முயற்சி குறித்து கூறிய புனே ரெஸ்டாரண்டுகள் மற்றும் ஹோட்டல்கள் கூட்டமைப்பு தலைவர் கணேஷ் ஷெட்டி, “முன்பெல்லாம் ஹோட்டல்களில் ஒரு நாளைக்கு 1,600 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. இந்த முயற்சியைத் தொடங்கி பிறகு குறைந்தது 50 லிட்டர் தண்ணீரை சேமித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன் சராசரியாக ஒரு வாடிக்கையாளர் மூலம் 100 மில்லி லிட்டர் தண்ணீர் தினமும் வீணானது என்று கூறிய அவர், வாடிக்கையாளர்களும் இந்த முயற்சியைப் பற்றி அறிந்து ஒத்துழைப்பு வழங்குவதற்காக தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தும் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

இதே போன்ற முயற்சியை கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த Why Waste என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்றும் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி