ஆப்நகரம்

கலெக்டருடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு!

பெண் குழந்தைகளை வீட்டில் சமமாக நடத்துங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Dec 2018, 10:28 am
சிறந்த கட்டுரை எழுதும் 25 மாணவிகளுக்கு கலெக்டருடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tiruvannamalai collector


திருவண்ணாமலையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘என் கனவு’ என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி என மொத்தம் 2,508 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 940 மாணவிகள் இதில் கலந்து கொண்டு சாதனை புரிகின்றனர். இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசியதாவது:

‘பெண் குழந்தைகள் சமுதாயத்தின் ஒரு பங்கு. அதனை எடுத்துரைக்கும் விதமாகவே தற்போது கடிதம் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கடிதத்தில் மாணவிகள் தங்களது ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உயர்கல்வியில் என்ன படிக்க ஆசை, குழந்தை திருமணம் செய்யக் கூடாது என்பது குறித்து அஞ்சல் அட்டையில் எழுதலாம். இதில் சிறந்த கடிதம் எழுதிய 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்னுடன் ஒரு நாள் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும். மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். பெண் குழந்தைகளை உங்கள் வீட்டில் உங்களுக்கு சமமாக நடத்துங்கள். அப்போது தான் சமுதாயத்திலும் அவர்கள் சமமாக நடத்தப்படுவார்கள்’

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி