ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டம்: கார்ல் மார்க்ஸ் கருத்து என்ன?

ஜல்லிக்கட்டு தடையை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்த தனது தரப்பை பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.

TNN 14 Jan 2017, 3:42 am
ஜல்லிக்கட்டு தடையை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்த தனது தரப்பை பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
Samayam Tamil writer karl max explains everything about his view on jallikattu protest
ஜல்லிக்கட்டு போராட்டம்: கார்ல் மார்க்ஸ் கருத்து என்ன?


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கவேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்த வழக்கின் மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆணையை பெற தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இளைஞர்களும் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பொங்கலுக்கு முன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு பற்றிய தனது கருத்தை எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் பேஸ்புக்கில் எழுதியுள்ளார். அதில் அவர், ஜல்லிக்கட்டு அரசியலின் பின்னணியில் ஐந்து தரப்பினர் செயல்பட்டு வருவதாகக் கூறி விளக்கியுள்ளார். இவரது கருத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிப்பதாக எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிக் விமர்சித்துள்ள ஜி.கார்ல் மார்க்ஸ், “ஜல்லிக்கட்டை பாரம்பரியம் என்று ஏற்றுக்கொண்டால், உடன்கட்டை ஏறுவதையும் பாரம்பரியம் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று புத்திசாலித்தனமாக கேட்கிறார்கள். இன்னும் என்ன மயிருக்கு நீதிமன்றங்களில் டவாலி…? என்று கேட்டு எத்தனை நீதிபதிகள் தீக்குளித்திருக்கிறார்கள்? நீதிமன்றங்கள், அரசியல் பொறுக்கித் தனத்தின் புகலிடமாக மாறியிருக்கும் சூழலில் இதைப் போன்ற விவகாரங்களில், சமூகத்தின் மேட்டிமைத்தன மனநிலையை சொரிந்து கொடுக்கும் தீர்ப்புகளை வழங்கி தமது செல்லரித்துப்போன மாண்புகளை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்த விவகாரத்தில் சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களின் போலிச்சீற்றங்கள் வெளிப்படுவதாகவும் அவர்களால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்மையாகப் போராடாடுபவர்களின் தரப்பு இருட்டடிப்புக்கு ஆளாவதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீரிய பங்களிப்பை அளிக்கும் சில தனிமனித அமைப்புகள் இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள், நாய்கள், அதன் மருந்து வியாபாரம், காளைகளின் விந்து வியாபாரம், பாரம்பரியக் காளைகளை கொன்றொழிக்கும் வெறித்தனம், பாரம்பரியக் காளைகளைக் காப்பதில் ‘ஜல்லிக்கட்டு’ போன்ற கலாச்சார விழாக்களின் பங்களிப்பு மற்றும் அதற்கு எதிரான கார்ப்பரேட் காய் நகர்த்தல்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறார்கள் என்றும் அவர் எழுதியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல்படும் இத்தகைய தனிமனித அமைப்புகள் சிலவற்றின் குரலை வலுவாக்குவதும், அவர்களோடு தம்மை ஆழமாகப் பிணைத்துக்கொண்டு பரந்த விவாதங்களை ஊக்குவிப்பதுமே அரசியல் கட்சிகள் இப்போது செய்யவேண்டியது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். “சன்னி லியோனை நமக்குப் பிடிப்பது வேறு. அவரைப் பீட்டா சென்ற ஆண்டின் ‘PETA person of the year’ ஆகத் தேர்ந்தெடுத்து நம்முன் நிறுத்துவது வேறு.” என்றும் ஜி.கார்ல் மார்க்ஸ் தனது பதிவின் முடிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

எழுத்தாளர் ஜி.கார்ல் மார்க்ஸ் வருவதற்கு முன்பிருந்த வெயில், சாத்தானை முத்தமிடும் கடவுள் ஆகிய நூல்களின் ஆசிரியர். அவரது பேஸ்புக் பதிவு இதோ.

அடுத்த செய்தி