ஆப்நகரம்

ஐபிஎல் 2020: வரலாற்று சாதனை படைத்த முகமது சிராஜ்; புகழ்ந்து தள்ளிய கோலி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் அதிரடியாகப் பந்துவீசி இரண்டு மெய்டன்கள், 3 விக்கெட்களை கைப்பற்றியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றிபெற்றது.

Samayam Tamil 22 Oct 2020, 10:54 am
அபுதாபியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. முகமது சிராஜ் தனது முதல் ஓவரில் ரன்கள் எதுவும் விட்டுக் கொடுக்காமல் ராகுல் திரிபாதி மற்றும் நிதிஷ் ராணா ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், நெருக்கடியில் விளையாடிய கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்கோர் 14 ரன்களை தாண்டுவதற்குள் ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா மற்றும் டாம் பன்டன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இப்போட்டியில் முகமது சிராஜ் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள், 8 ரன்கள் மட்டும் வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
Samayam Tamil Siraj


இதுகுறித்து பேசிய விராட் கோலி, சிராஜின் அதிரடி பந்துவீச்சைப் புகழ்ந்து தள்ளினார். “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சிராஜிற்கு இரண்டாவது ஓவர் கொடுத்தது தவறு. ஓபனிங் ஓவரை வீச அழைத்திருக்க வேண்டும். டாஸை இழந்தது மகிழ்ச்சி. இல்லையென்றால் நாங்கள்தான் முதலில் பேட் செய்திருப்போம். கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தரைத்தான் பவர் பிளேவில் பயன்படுத்த விரும்பினேன்.

ஆனால், முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் எனக் கருதினேன். எனது முடிவு சரியானது என சிராஜ் நிரூபித்துவிட்டார். மிகவும் அபாரமாகப் பந்து வீசினார்” எனக் கூறினார். “கடந்த வருடம் சிராஜ் சரியாக சோபிக்கவில்லை. இதனால், கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த கரையை போக்குவதற்காகக் கடுமையாகப் பயிற்சி செய்தார்.

RCB vs KKR: எப்படி ஜெயித்தது பெங்களூர்? கொல்கத்தா செய்த மூன்று தவறுகள்!

வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டார். அதற்கான பலன் இப்போட்டியில் தெரிந்தது. எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை தொடர வேண்டும்” என வலியுறுத்தினார். அடுத்துப் பேசிய சிராஜ், கடின உழைப்பிற்குப் பரிசு கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார். “விராட் கோலி என் மீது நம்பிக்கை வைத்து போட்டியின் இரண்டாவது ஓவரை வீச அழைத்தார்.

அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பவர் பிளேவில் பந்து வீசுவேன் எனக் கடைசி நிமிடம் வரை தெரியாது. கோலி என்னைப் பார்த்து அடுத்து நீதான் பந்துவீச வேண்டும் என்றார்” எனத் திகைப்புடன் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்