ஆப்நகரம்

பெங்களூர் அணி தோல்விக்குக் காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்து, மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

Samayam Tamil 16 Oct 2020, 8:56 am
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில், 171 ரன்கள் குவித்த நிலையில், பஞ்சாப் அணி சரியான திட்டமிடலுடன் களமிறங்கி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது. இருப்பினும், 12 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பெங்களூர் அணி பந்துவீச்சில் அதிரடி காட்டியது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், நிகோலஸ் பூரன் அதிரடியாக சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இப்போட்டியில் பெங்களூர் அணி, டிவிலியர்ஸ் மற்றும் பௌலர்களை பயன்படுத்திய விதத்தில் சொதப்பியதாகக் கூறப்படுகிறது. ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணி செய்த மூன்று முக்கியத் தவறுகளைப் பற்றி தற்போது பார்ப்போம்.
Samayam Tamil RCB vs KXIP


ஏபி டிவிலியர்ஸை கடைசி நேரத்தில் களமிறக்கியது:

பெங்களூர் அணிக்கு பலமாகப் பார்க்கப்படுவது, முதல் வரிசை பேட்ஸ்மேன்களான விராட் கோலி, டிவிலியர்ஸ் கூட்டணிதான். கடந்த போட்டியில் டிவிலியர்ஸ் அதிரடியாக விளையாடி ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற நிலையில், நேற்றைய போட்டியில் 6ஆவது வரிசையில் களமிறக்கப்பட்டார். டிவிலியர்ஸ் ஸ்பின்னர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாட மாட்டார் எனக் கருதிதான், அவரை முன் கூட்டியே களமிறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், டிவிலியர்ஸ் ஒருமுறை நிலைத்து நின்றுவிட்டால், எப்பேர்ப்பட்ட பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிடுவார் என்பதைப் பெங்களூர் அணி நிர்வாகம் மறந்துவிட்டதாக தெரிகிறது.

கடைசிவரை இழுத்தடித்த பஞ்சாப், கோட்டைவிட்ட கோலி

பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம்:

வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாகப் பந்துவீசி விக்கெட்களை எடுக்கக் கூடியவர். ஆனால், நேற்றைய போட்டியில் அவருக்கு முதல் 6 ஓவர்களில் வாய்ப்பு தரப்படவில்லை. இஸ்ரு உதானா, யுஜ்வேந்திர சஹலுக்கு ஓவர்கள் இருந்தபோது, முகமது சிராஜிக்கு டெத் ஓவர்களில் வாய்ப்பு வழங்கி பஞ்சாப் அணிக்கு 20 ரன்களை இலவசமாக வாரிக் கொடுத்தார் கோலி. இப்போட்டியில் உதானா 2 ஓவர்களும், சஹல் மூன்று ஓவர்களும் மட்டுமே வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஓவரில் ரன்களை குவிக்கத் திணறியது:

பெங்களூர் அணி முதல் 6 ஓவர்களில் 57 ரன்கள் குவித்து அசத்தியது. குறைந்தது 200 ரன்களையாவது கடந்துவிடும் எனக் கருதிய நிலையில், அடுத்த 8 ஓவர்களில் வெறும் 47 ரன்கள் மட்டும் எடுத்து பரிதாப நிலையை அடைந்தது. 12, 13, 14 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட பறக்கவில்லை. டெத் ஓவர்களிலும் சொதப்பியதால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்