ஆப்நகரம்

சாம் கரன் vs டாம் கரன்: இரக்கம் இல்லையா உடன் பிறப்பே?

இன்றைய ஐபிஎல் போட்டியில் கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Samayam Tamil 10 Apr 2021, 9:48 pm
இங்கிலாந்து அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களும் சகோதரர்களுமான சாம் கரனும் டாம் கரனும் சர்வதேசப் போட்டிகளில் சமீப காலமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சாம் கரன் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சக்கை போடு போடுகிறார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியிலும் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றியைப் பறித்துவிட்டார் என்றே கூறலாம். இப்போட்டி முடிந்த கையோடு சென்னை அணிக்காக தல தோனியின் தலைமையில் மஞ்சள் ஜெர்சியில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார். அவரது அண்ணன் டாம் கரன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
Samayam Tamil sam


இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் தல தோனி, சின்ன தல சுரேஷ் ரெய்னா விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோலவே, கரன் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதப்பட்டது. சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தோனி ஆட்டமிழந்து வெளியேறியவுடன் ஏழாவது வீரராகக் களமிறங்கினார் சாம் கரன். ஆட்டத்தின் 17ஆவது ஓவரை வீச வந்தது அவரது அண்ணன் டாம் கரன்.

இந்த ஓவரில் டாம் கரனின் கையே ஓங்கியிருந்தது. மூன்று பந்துகளை எதிர்கொண்ட சாம் கரன் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் சேர்த்தார். மற்ற மூன்று பந்துகளையும் ஜடேஜா எதிர்கொண்டு 2 ரன் மட்டும் எடுத்தார். டாம் கரனின் இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே.

மீண்டும் 19ஆவது ஓவரை வீச டாம் கரன் வந்தார். இந்த முறை அண்ணனின் பந்துவீச்சை ஒருவழி செய்ய வேண்டும் என்று காத்திருந்த சாம் கரனுக்கு முதல் பந்து ஒய்டாகவே வந்தது. மீண்டும் வீசப்பட்ட பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு தெறிக்கவிட்டார் சாம் கரன். அடுத்த பந்திலும் சிக்ஸர். அதோடு விட்டுவைக்கவில்லை. மூன்றாவது பந்தில் பவுண்டரி. கடைசி பந்தில் ஒரு ரன் என, இந்த ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது. சாம் கரன் இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசினார்.

இன்று உலக உடன் பிறப்புகள் தினம்... அண்ணன் மேல கொஞ்சம் கூட பாசம், இரக்கம் இல்லையா சாம் கரன்?

அடுத்த செய்தி

டிரெண்டிங்