ஆப்நகரம்

டி20 உலகக் கோப்பை: தவன் ஓபனிங் இறங்க முடியுமா? இது நடந்தால்தான் சாத்தியம்…அகர்கர் ஓபன்டாக்!

டி20 உலகக் கோப்பையில் ஷிகர் தவனுக்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து அஜித் அகர்கர் பேசியுள்ளார்.

Samayam Tamil 14 Jul 2021, 5:53 pm
விராட் கோலி, முகமது ஷமி போன்ற மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி தலா மூன்று ஒருநாள், டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ளது.
Samayam Tamil ஷிகர் தவன்


இளம் அணி:

இந்த இளம் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சகார்யா, தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ஷிகர் தவன், பயிற்சியாளராக ராகுல் திராவிட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தொடரில் சிறப்பாக சோபிக்கும் வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தவனுக்கு நெருக்கடி:

இந்திய டி20 அணியில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் ஓபனர்களாக களமிறங்கி வருகின்றனர். டி20 உலகக் கோப்பையில் இவர்கள்தான் ஓபனர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இதனால் மூத்த துக்க வீரர் ஷிகர் தவனுக்கு டி20 உலகக் கோப்பையில் களமிறங்க வாய்ப்பு குறைவு என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இலங்கை தொடர், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் இவர் அதிரடி காட்டினால் மட்டுமே தவனுக்கு டி20 உலகக் கோப்பை XI அணியில் இடம் கிடைக்கும் எனவும், அதுவும் கே.எல்.ராகுல் சொதப்பலாக பேட்டிங் செய்தால் மட்டுமே இது சாத்தியம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அகர்கர் பேட்டி:

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அஜித் அகார்கர் பேசியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள அவர், தவன் டி20 உலகக் கோப்பை இந்திய XI அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

“ஷிகர் தவன், இலங்கை தொடரில் முடிந்த அளவுக்குப் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். அது கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா மீது அழுத்தத்தை உருவாக்கும். அப்படி அழுத்தம் ஏற்பட்டு ராகுல் அல்லது ரோஹித் ஐபிஎல் 14ஆவது சீசனில் எஞ்சிய லீக் போட்டிகளில் சொதப்பினால், டி20 உலகக் கோப்பையில் தவனால் நிச்சயம் களமிறங்க முடியும். இதனால் தவன், இலங்கை தொடர், ஐபிஎல் ஆகியவற்றில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிய வேண்டும். ஒருசில போட்டிகளில் தவன் சொதப்பினாலும்கூட டி20 உலகக் கோப்பையில் களமிறங்க முடியாது” எனத் தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட்டில் தவன் 127 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்