ஆப்நகரம்

ஐசிசி இறுதி முடிவு: நாளை வாய்ப்பில்லை? ‘ஜூன் 18 தான்’…இந்தியாவுக்கு ஜாக்பாட் அடிக்குமா?

டி20 உலகக் கோப்பை குறித்து நாளை இறுதி முடிவு எடுக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 31 May 2021, 8:23 pm
டி20 உலகக் கோப்பை இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இங்கு கொரோனா 2ஆவது அலை விஸ்வரூபம் எடுத்ததால், போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற ஐசிசி முயன்று வருகிறது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க நாளை ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil டி20 உலகக் கோப்பை


இதில் இந்தியா சார்பில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து மே 29ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்பிறகு அறிக்கை வெளியிட்ட ஜெய் ஷா, “இந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதம் பருவ மழை பெய்யும் என்பதால் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும், இந்தியாவில் டி20 உலகக் கோப்பை 2021 நடத்து குறித்து ஜூன் 1ஆம் தேதி நடக்கும் ஐசிசி நிர்வாகிகள் கூட்டத்தில் கூடுதல் அவகாசம் கேட்கவுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார். இதனை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதன்மூலம் நாளை நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

ஐசிசியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 18ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் 2023 முதல் 2031வரை எட்டு வருடங்களுக்கான கிரிக்கெட் தொடர்கள் குறித்த ஆலோசனை நடைபெறும். அப்போது டி20 உலகக் கோப்பை 2021 குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

அதற்குள் பிசிசிஐ, இந்திய அரசாங்கத்திடம் டி20 உலகக் கோப்பை நடத்தச் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? போன்ற விஷயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பெற்று அதனை அறிக்கை தயார் ஐசிசியிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கவில்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்