ஆப்நகரம்

'சூப்பர்'.. உலக அரங்கில் சாதித்த தமிழன்.. மாஸ் காட்டிய அஸ்வின்.. பெளலிங்கில் நம்பர் ஒன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த தொடரில் ஜொலித்த (22 விக்கெட்டுகள்) மற்றொரு இந்திய வீரர் ஜடேஜா 9வது இடத்தில் உள்ளார்.

Samayam Tamil 15 Mar 2023, 7:32 pm
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தி உள்ளது. இதேபோல் தென்னாப்பிரிக்கா-மேற்கு இந்திய தீவு டெஸ்ட் தொடர், இலங்கை-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளன.
Samayam Tamil Ravichandran Ashwin
Ravichandran Ashwin


இந்த போட்டிகள் வரை கணக்கில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் ரிஷப் பண்ட் 9வது இடத்திலும், ரோகித் சர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.

நம்பர் ஒன் பெளலர் அஸ்வின்

இதேபோல் பெளலிங் தரவரிசை பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின் பெளலர் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 869 புள்ளிகளுடன் முதல் இடத்தை அலங்கரித்துள்ள அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் இருந்து அந்த இடத்தை தட்டி பறித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்தியா கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கிய அஸ்வின் இந்த தொடரில் மட்டும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பெற்று அசத்தினார். அதுவும் பேட்டிங்குக்கு சாதகமான அகமதாபாத் மைதானத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் ஏன் நம்பர் ஓன் பெளலர் என்பதை நிரூபித்தார்.

ஜடேஜா-பும்ரா

அஸ்வினின் இந்த கடினமான உழைப்புதான் அவரை தற்போது உலக அரங்கில் நம்பர் ஒன் பெளலராக கொண்டு அமர வைத்துள்ளது. உலக அரங்கில் சாதித்த தமிழன் அஸ்வினுக்கு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 22 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 753 புள்ளிகளுடன் 9வது இடத்தில் அமர்ந்துள்ளார். நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா (780 புள்ளிகள்) 7வது இடத்தில் இருக்கிறார்.

40 வயதில் அசத்தும் ஆண்டர்சன்

ஐசிசி பெளலிங் தரவரிசை பட்டியலில் 40 வயதான இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் (841 புள்ளிகள்) 3வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் ரபடா (825 புள்ளிகள்) 4வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் இளம் வீரர் ஷாகீன் ஷா அப்ரிடி (787 புள்ளிகள்) 5வது இடத்தில் வீற்றிருக்கிறார்.

நாதன் லயனுக்கு எந்த இடம்?

இங்கிலாந்து வீரர் ராபின்சன் 785 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இந்திய தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸி. வீரர் நாதன் லயன் 757 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் அமர்ந்துள்ளனர். நியூசிலாந்து வீரர் ஜேமின்சன் (749 புள்ளிகள்) 10வது இடத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்