ஆப்நகரம்

சிக்ஸர்களை பறக்கவிட்டு சிக்கலைத் தீர்த்தார் தோனி: மும்பை இலக்கு 163!

பத்தாவது ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே-ஆப் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி மும்பை அணியின் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Samayam Tamil 16 May 2017, 9:59 pm
மும்பை: பத்தாவது ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே-ஆப் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி மும்பை அணியின் வெற்றிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
Samayam Tamil mi to chase 163 runs in new slow track at wankhede stadium
சிக்ஸர்களை பறக்கவிட்டு சிக்கலைத் தீர்த்தார் தோனி: மும்பை இலக்கு 163!


பத்தாவது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் இன்று ப்ளே-ஆப் சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். பின் பேட்டிங்கைத் தொடங்கிய புனே அணியின் தொடக்க வீரர் திரிபாதி முதல் ஓவரிலேயே வெளியேறி ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித்தும் ஒரு ரன்னில் அவுட்டானார்.

பின், ரஹானேயுடன் மனோஜ் திவாரி இணைந்ததும் சீராக ரன் சேர்க்கத் தொடங்கினர். சிறப்பாக விளையாடிய ரஹானே இத்தொடரின் இரண்டாவது அரைசதத்தை விளாசினார். ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 56 ரன்கள் எடுத்த நிலையில் கரண் சர்மாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இத்தொடரில் முதல் போட்டியில் மட்டும் அரைசதம் அடித்த ரஹானே தொடர்ந்து சொதப்பி வந்தார். இந்த அரைசதம் மூலம் மீண்டும் தனது வழக்கமான ஆட்டத்திற்குத் திரும்பிய அவர், ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களையும் கடந்தார்.

அடுத்து வந்த தோனி திவாரியுடன் இணைந்து ரன் குவிக்கப் போராடினார். ஆனால், மும்பை பந்துவீச்சை கணிக்கமுடியாத இந்த ஜோடி ஓட்டத்தின் மூலமாகவே ஸ்கோர் போர்டை நகர்த்தியது.

19வது ஓவரில் ஆவேசமான இந்த ஜோடி இரண்டு அதிரடியாக ரன் சேர்க்க முனைந்தது. முதல் பந்திலேயே திவாரி பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார். பின் தோனியும் தன் பங்கிற்கு இரண்டு சிக்ஸர் அடித்தார். இதுவரை சிறப்பாக பந்துவீசிய மெக்லகன் இந்த ஓவரில் 26 ரன்களை வாரி வழங்கினார்.

பும்ரா வீசிய கடைசி ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதனால் முதல் 4 பந்துகளில் 15 ரன்கள் வந்தது. இருப்பினும் அடுத்த இரண்டு பந்துகளை அருமையான யார்க்கர்களாக வீசினார். கடைசி பந்தில் மனோஜ் திவாரியையும் ரன் அவுட் செய்து விட்டுக்கொடுத்த ரன்களுக்கு பரிகாரம் செய்தார்.

இறுதியில், புனே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. கடைசி வரை தாக்குப்பிடித்த திவாரி 48 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். 150 ரன்களை எட்டுவது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், தோனி சிக்ஸர்களைப் பறக்கவிட்டு சிக்கலைத் தீர்த்தார். அவர் 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். மும்பை தரப்பில் மெக்லகன், மலிங்கா, கரண் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்