ஆப்நகரம்

ShaneWarne: மறக்க முடியுமா சூழல் ஜாம்பவானை.. 'உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்'.. உருகிய சச்சின்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே 1992 முதல் 2007ம் ஆண்டு வரை கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்தார். 2022 மார்ச் 4ம் தேதி இருதய கோளாறு காரணமாக இவர் உயிரிழந்தார்.

Samayam Tamil 4 Mar 2023, 6:39 pm
கிரிக்கெட் உலகில் ஆயிரக்கணக்கான வீரர்கள் வரலாம்; போகலாம். ஆனால் வரலாற்றில் என்றென்றும் இடம் பிடித்திருக்கும் பாக்கியம் சில வீரர்களுக்குதான் உண்டு. அதில் ஒருவர்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே.
Samayam Tamil sachin and warne
sachin and warne


கடந்த ஆண்டு இதே நாள் அவர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றார். ஆம்.. வார்னேவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. யார் இந்த வார்னே? அவர் ஏன் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்?

ஷேன் வார்னே
1992 முதல் 2007ம் ஆண்டு வரை பேட்ஸ்மேன்களை அலற விட்டவர்தான் இந்த வார்னே. தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் விக்கெட் வேட்டை நடத்தியது மட்டுமில்லாமல் சுமார் 15 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகின் ராஜாவாக வலம் வர முக்கிய காரணகர்த்தா வார்னேதான். இவர் விளையாடிய காலகட்டத்தில் ஆஸ்திரேலியா 3 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளதே இதற்கு சாட்சி.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் 600, 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பெளலர் என்ற சாதனையை படைத்த வார்னே, 145 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 708 விக்கெட்டுகளும், 194 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டுமின்றி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் கோலோச்சியவர் வார்னே.

ஜடேஜாவின் வளர்ச்சிக்கு காரணமானவர்
பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக விளையாடும் ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், டிராவிட் , ஜெயவர்த்தனே, சங்ககாரா ஆகியோரை தனது சுழல் வலையில் வார்னே எளிதாக வீழ்த்தியுள்ளார். முதலாவது ஐபிஎல் தொடரை வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தவர் வார்னேதான். இந்திய வீரர் ஜடேஜா வளர்ச்சிக்கு பெரும் வகித்தவர் இவர்தான்.

சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை
பல்வேறு சாதனைகளை படைத்த வார்னேவின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2003ம் ஆண்டு ஊக்க மருந்து சோதனை பயன்படுத்தியதாக அவருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. சாதனைகளின் மன்னன், சர்ச்சைகளின் நாயகன் வார்னேவை கிரிக்கெட் வீரர்கள் பலரும் நினைவு கூர்ந்து வருகினறனர்.

சச்சின் உருக்கம்
அந்த வகையில் வார்னேவின் மிக நெருங்கிய நண்பரான சச்சின் டெண்டுல்கர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். ''களத்தில் சில மறக்கமுடியாத தருணங்களைப் நாங்கள் பகிர்ந்துகொண்டோம். களத்தில் மட்டுமின்றி வெளியேயும் நல்ல நண்பர்களாக திகழ்ந்தோம். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வின் மூலம்சொர்க்கத்தையும் அழகான இடமாக நீங்கள் மாற்றி இருப்பீர்கள் வார்னே'' என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்