ஆப்நகரம்

19 வயதுக்கு உட்படோர் உலக கோப்பை: புது சாதனையுடன் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் இந்திய அணி!

19 வயதுக்கு உட்படோருக்கான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

Samayam Tamil 29 Jan 2020, 11:16 am
தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்படோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கிறது. மொத்தமாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஏ பிரிவில் ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுது. இந்நிலையில் இதன் முதல் காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
Samayam Tamil Kartik Tyagi


அதர்வா மிரட்டல்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் துவக்கம் அளித்தனர். சக்சேனா 14 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். பின் வந்த திலக்வர்மா (2), பிரியம் கார்க் (5) ஏமாற்றினர். இதையடுத்து இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது.

பின் வந்த அதர்வா, பிஷ்னோ அணியை சரிவில் இருந்து மீட்டனர். பிஷ்னோ 30 ரன்கள் எடுத்த போது வெளியேறினார். ஆனால் அதர்வா தொடர்ந்து மிரட்ட, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்தது.


தியாகி அபாரம்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி மட்டமான துவக்கம் அளித்தது. தியாகி வீசிய போட்டியின் முதல் ஓவரின் 4ஆவது, 5ஆவது பந்தில் ஹார்வி (4), ஹெர்னே (0) வெளியேறினர். அடுத்த பந்தை டேவிஸ் தடுத்து ஆட தியாகியின் ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது. இருந்தாலும் டேவிஸ் (2) நீண்டநேரம் நிலைக்கவில்லை.


பின் ஜோடி சேர்ந்த பேனிங், ஸ்காட் அணியை மீட்டனர். இந்திய பவுலர்களை இருவரும் சமாளித்து ரன்கள் சேர்க்க துவங்கினார். இந்நிலையில் ஸ்காட்டை (35) பிஸ்னோ வெளியேற்றினார். இவரை தொடர்ந்து பேனிங்கும் (75) அரைசதம் கடந்து அவுட்டாக பின் வரி சை வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்தியா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.


ஏழாவது முறை
இதன் மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏழாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. முன்னதாக 2000, 2004, 2006, 2012, 2016, 2018 என ஆறு முறை இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்