ஆப்நகரம்

1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய அக்ஷய் குமார்: அசாம் முதலமைச்சர் உருக்கமான நன்றி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள அசாம் மாநிலத்திற்கு ஒரு கோடி ருபாய் அக்ஷய் குமார் வழங்கி இருக்கிறார். அவருக்கு அசாம் முதலமைச்சர் ட்விட்டரில் நன்றி கூறி இருக்கிறார்.

Samayam Tamil 19 Aug 2020, 9:38 am
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உலக அளவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் டாப் 10 லிஸ்ட்டில் இருக்கிறார். அவர் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில் உலக அளவில் ஆறாம் இடம் பிடித்து இருக்கிறார். டாப் 10ல் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். சென்ற வருடம் மட்டும் அவரது வருமானம் 48.5 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. அது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 362 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil Akshay Kumar


மேலும் அக்ஷய் குமார் பல்வேறு விதங்களில் நன்கொடைகளையும் தொடர்ந்து அளித்து வருகிறார். கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவிய நேரத்தில் நிதி உதவி அளிக்கும் படி இந்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் PM Cares நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாக அக்ஷய் குமார் அறிவித்திருந்தார். இவ்வளவு பெரிய தொகையை அளித்த ஒரே நடிகர் அக்ஷய் குமார் மட்டும் தான். இந்நிலையில் தற்போது இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் அசாம் அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

அக்ஷய் குமார் செய்திருக்கும் இந்த உதவிக்கு அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் ட்விட்டரில் நன்றி தெரிவித்து இருக்கிறார். "அசாம் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு கோடி ரூபாய் வழங்கிய அக்ஷய் குமாருக்கு நன்றி. நீங்கள் எப்போதும் இது போன்ற மோசமான கால கட்டத்தில் அனுதாபம் மற்றும் ஆதரவை அளித்து வருகிறீர்கள். அசாமின் உண்மையான நண்பரான உங்களுக்கு கடவுள் அனைத்து ஆசீர்வாதங்களையும் வழங்கட்டும். உலக அரங்கில் உங்களது வெற்றி தொடரட்டும் என அவர் கூறியிருக்கிறார்.


கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை காரணமாக அசாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போதும் சுமார் 1087 கிராமங்களில் உள்ள 9 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என Assam State Disaster Management Authority (ASDMA) தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜூலை 24ம் தேதியுடன் ஒப்பிடுகையில் இது குறைவு தான். அப்போது 26 மாவட்டங்களில், 2,543 கிராமங்களில் இருக்கும் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.

அசாம் மட்டுமன்றி அக்ஷய் குமார் பீகார் மாநிலத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். அங்கும் வெள்ளம் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது. சென்ற வாரம் அவர் பீகார் மற்றும் அசாம் மாநில முதலமைச்சர்கள் உடன் பேசினார் என்றும் அப்போது தான் இரண்டு மாநிலங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக கூறியிருக்கிறார். அவர்கள் அதற்காக அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இப்படி அக்ஷய் குமார் நிவாரண நிதி வழங்குவது முதல் முறையல்ல. கடந்த வருடம் மார்ச் மாதம் ஒடிசா மாநில மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது ஒரு கோடி ரூபாய் அவர் வழங்கியிருந்தார்.

மேலும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் பீகார் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 25 குடும்பங்கள் மீண்டும் புனர்வாழ்வு வழங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் அக்ஷய் குமார் வழங்கியிருந்தார். அது மட்டுமின்றி 2018ல் கேரள மாநிலம் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது தன்னுடைய உதவியை அக்ஷய்குமார் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்