ஆப்நகரம்

எஸ்பிபி-யின் பாலிவுட் பயணம் பற்றி அதிகம் தெரியாத தகவல்கள்

கொரோனோவுடன் போராடி நம்மை எல்லாம் மீளாத்துயரில் விட்டு சென்ற எஸ். பி. பாலசுப்ரமணியம், யாராலும் ஈடு செய்ய முடியாத சாதனைகளை செய்துள்ளார். தென்னிந்தியா மட்டுமல்ல பாலிவுட்டிலும் தனது பாடல்களால் ஆட்சி செய்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 10:07 pm
1981 ல் கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கேலியே படம் மூலம் பாலிவுட் உலகில் நுழைந்த எஸ். பி. பாலசுப்ரமணியம், பின் அங்கும் தவிர்க்க முடியாத பாடகராகிவிட்டார். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படமான இதில் எஸ்பிபி-யை பாட வைப்பதில் ஆரம்பத்தில், இதன் இசையமைப்பாளர்கள் தயங்கினார்கள். ஆனால் டைரக்டர் பாலசந்தர் உறுதியோடு இருந்ததால் , எஸ்பிபி-யின் அறிமுகம் சாத்தியமானது.
Samayam Tamil SPB with Salman Khan


அப்படி ரெக்கார்டு செய்யப்பட்ட இந்த பாடல் பயங்கர ஹிட்டானது மட்டுமல்லாமல், அவருக்கு இரண்டாவது தேசிய அவார்டையும் வாங்கி கொடுத்தது.

அதை தொடர்ந்த வருடங்களில், அவர் பாலிவுட்டில் பாடிய பல பாடல்கள் காலத்தால் அழியாதவையாக ரசிகர்கள் மனதில் நின்றது. லதா மங்கேஸ்கருடன் அவர் பாடிய டூயட் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். இஸ்கா நாம் ஹை ஜீவன் தாரா, ஓ மரி தில்ருபா, பாஹோன் மேன் பார்கே பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படுகிறது.

நவ்ஷாத், கல்யான்-ஆனந்த், ஆர். டி. பர்மன் என எல்லா இசை ஜாம்பவான்களுடனும் இணைந்து பணியாற்றிய எஸ்பிபி , ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, ஏன்??!! சல்மான், ஷாரூக் என கிட்டத்தட்ட எல்லா டாப் ஹீரோக்கள் உடனும் பணியாற்றியுள்ளார்.

ஒரு காலகட்டத்தில் சல்மான் கானின் ஆஸ்தான பாடகராக எஸ்பிபி இருந்தார் என கூறினால் மறுப்பதற்கில்லை. 1980-90 க்கு இடைப்பட்ட காலத்தில் ரொமான்ஸ் ஹீரோவாக திகழ்ந்த சல்மான் நடித்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டானதற்கு காரணம் அருமையான இசையமைப்பும், காதல் சொட்ட சொட்ட எஸ்பிபி பாடியதும் தான் என்றால் மிகையாகாது.

பின் கொஞ்சம் நாள்கள் இடைவெளி எடுத்த எஸ் பி பி, 2013 ல் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் டைட்டில் பாடல் மூலம் மறுபடியும் பாலிவுட்டில் தனது முத்திரையை பதித்தார். இந்த பாடலும் சூப்பர் ஹிட் தான்.

இத்தனை சாதனைகள் புரிந்த எஸ்பிபி இப்போது நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரின் பாடல்களும் சரி, அவரும் சரி மறக்கப்படாமல் ரசிகர்கள் மனதில் என்றும் அழியாமல் நிற்பார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்