ஆப்நகரம்

RIP Crazy Mohan: கிரேஸி மோகன் வாழ்க்கை, சாதனைகள்- ஒரு பார்வை

கிரேஸி மோகன் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர். எம்ஐடி கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் பயின்று பின்னர் எம்.டெக் முடித்த மோகன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார்.

Samayam Tamil 10 Jun 2019, 2:51 pm
கிரேஸி மோகன் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர். எம்ஐடி கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் பாடப்பிரிவில் பயின்று பின்னர் எம்.டெக் முடித்த மோகன், பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார்.
Samayam Tamil 1560154575_crazy-mohan-kamal-haasan


பின்னர் சினிமா ஆர்வத்தால் மாது பாலாஜி, சீனு மோகன், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய தன் குழுவுடன் இணைந்து நாடங்கள் அரங்கேற்றினார். கல்லூரி நாட்களில் இருந்தே நாடகத் துறை மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். இவரது ’கிரேஸி தீவிஸ் ஆஃப் பாலவாக்கம்’ டிராமா அக்காலங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

மேலும் இவரது ’மேரேஜஸ் ஆர் மேட் இன் சலூன்’ டிராமாவை பார்த்து வியந்த இயக்குநர் கே.பாலசந்தர் ’பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் அதனைப் படமாக எடுத்தார்.

கமல், பாலசந்தர் ஆகிய இருவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் கிரேஸி மோகன். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்மந்தம், தசாவதாரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடி டிராக்குக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஜெர்ரி என்ற படத்தை இயக்கியுள்ளார். பல படங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்த அவர் திரை நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தேடினேன் வந்தது, சின்ன வாத்தியார், வியட்நாம் காலனி ஆகிய படங்களில் இவரது வசனங்களை கவுண்டமணி பேசும்போது கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இன்றும் இவரது பல காலத்தில் அழியாத நகைச்சுவை வசனங்கள் ரசிகர்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.

சமீபத்தில் கிரேஸி 20-20, சாக்லேட் கிரிஷ்ணா உள்ளிட்ட பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி இயக்கி நடித்துள்ளார்.

நாடகத்துறையில் தடம்பதித்த எஸ்.வி.சேகர், விசு, மவுலி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வரிசையில் கிரேஸி மோகனுக்கு முக்கிய இடம் உண்டு. உலகின் பல பகுதிகளில் இவரது நாடகங்கள் அரங்கேறியுள்ளன.

சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத மோகன் நாடகங்களை மட்டுமே இயக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் கல்யாண சமையல் சாதம் படத்துக்கு வசனம் எழுதினார்.

மேலும் ஜெயா டிவியில் பல நகைச்சுவை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்