ஆப்நகரம்

இளவரசியின் ஆணை நிறைவேறியது: 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்த வந்தியத்தேவன்!

'பொன்னியின் செல்வன்' படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

Samayam Tamil 17 Sep 2021, 10:52 am
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்து வந்த கார்த்தி தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Karthi
Karthi


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மகேஷ்வர் நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
அதனை தொடர்ந்து தற்போது கார்த்தியும் தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசர் ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒவ்வொருவராக தங்களின் படப்பிடிப்பை முடித்து வருவதால், விரைவில் 'பொன்னியின் செல்வன்' ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்