ஆப்நகரம்

ஒத்த செருப்பு சைஸ் 7க்காக மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன்: பார்த்திபன்!

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு மாணவனைப் போன்று நான் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2019, 8:09 pm
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள் மூலம் தன்னைத்தானே எல்லைகளுக்கு அப்பால் பல சமயங்களில் கொண்டு சென்றுள்ளார். நட்சத்திர அந்தஸ்து மற்றும் உச்சநிலை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பலரும் ரசிகர் கூட்டத்தை திரையரங்குகளுக்கு இழுத்துக் கொண்டிருந்த போதிலும், அவர் தனியொரு மனிதராகவே தனது தனித்துவமான கதை மற்றும் வித்தியாசமான சினிமாக்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.
Samayam Tamil otha seruppu


பல்துறை வித்தகரான அவர் "ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற அவரது முத்திரை பதிக்கப்பட்ட படத்தின் மூலம் நம்மை கவர்ந்திழுக்கிறார். தவறாமல் பார்த்து விட வேண்டும் என்ற சினிமா ஆர்வலர்களின் பட்டியலில் இந்த படம் ஏற்கனவே முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தணிக்கை குழுவில் ‘யு சான்றிதழ் கிடைத்திருப்பதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்க மிகவும் தகுதியான படமாக மாறியிருக்கிறது. எழுத்தாளர் - இயக்குனர் - நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறும்போது, “நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கை சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்.

சமரசம் செய்வதன் மூலம், ஸ்கிரிப்ட் அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். ஒத்த செருப்பு சைஸ் 7 கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்கு தணிக்கை குழுவில் ‘யு சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன. ஒன்று தணிக்கை குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அவர்களிடம் முன்வைக்க ஒரு மாணவரை போல ஆர்வமாக காத்திருக்கிறேன். விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்" என்றார்.

இந்த படம் அதன் ‘ஒற்றை கதாபாத்திரம் காரணிக்காக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும். ஆனால் பார்த்திபனின் கூற்றுப்படி, அதில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன. இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் இங்கே ஒரு கதாபாத்திரம் தான். சந்தோஷ் நாராயணனின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலி, அமரனின் கலை அமைப்பு, மற்றும் சுதர்சனின் படத்தொகுப்பு ஆகியவை ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களாகவே வெளிப்படுத்தப்படும். இந்த ஒரு 'ஒற்றை கதாபாத்திரம்' கான்செப்டை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச அளவில் சில படங்கள் வந்துள்ளன.

அதன் வெற்றிகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அதற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ஒரு அற்புதமான தொழில்நுட்பக் குழுவையே சாரும். படத்தின் இறுதி வடிவத்தை நான் காணும்போது, நிச்சயமாக அது எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு பதிப்பாக அமைந்திருக்கிறது என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்