ஆப்நகரம்

பாஜவுக்குள் மறைந்தாரா ரஜினிகாந்த்; சமூக வலைதளங்களில் சலசலப்பு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க அமைத்திருக்கும் மேடையில் தாமரை இடம் பெற்று இருப்பது பாஜகவுக்குள் ரஜினி மறைந்து வருகிறாரா என்று சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 16 May 2017, 2:07 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க அமைத்திருக்கும் மேடையில் தாமரை இடம் பெற்று இருப்பது பாஜகவுக்குள் ரஜினி மறைந்து வருகிறாரா என்று சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil actor rajinikanth has hid himself behind lotus
பாஜவுக்குள் மறைந்தாரா ரஜினிகாந்த்; சமூக வலைதளங்களில் சலசலப்பு!!


தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு அதை யார் நிரப்புவது என்பதில் போட்டி நடக்கிறது. ஆனால், அந்த வெற்றிடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்ப முடியாது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சினிமா துறையில் நட்சத்திரங்களாக ஜொலித்து திரைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு என்று பெரிய அளவில் மக்களிடையே செல்வாக்கு இருந்தது. இதை சமீபத்தில் ஜெயலலிதா இறந்தபோது கண்கூடாக இந்த தேசமே பார்த்தது. அவரது இறப்பு அவரது அபிமானிகளை, அதிமுக தொண்டர்களை மட்டுமின்றி அவரது அரசியல் விமர்சகர்களையும் உலுக்கியது.

அவரது மரணம் தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றிடத்தை ஏற்படுத்தி, மக்களே அதை உணர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்புவோம் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு தெரிவித்து இருந்தார்.

இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்ற வழி தெரியாமல் தடுமாறுவதைப் போலதான் தெரிகிறது. இந்த திரைமறைவில்தான் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதைப் போன்ற ஒரு தகவலை வெளியிட்டு ரஜினியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி இல்லை. தற்போது பாஜக இவரை அரசியலில் முன் நிறுத்தலாம் என்ற உறுதிபடுத்தாத தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக பல்வேறு கேள்விகள் ரஜினி குறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது. எத்தனை காலத்திற்கு இதையே சொல்வீர்கள்? எப்போது அரசியலுக்கு வருவீர்கள்? வருவீர்கள் ஆனால் வரமாட்டீர்கள்... இப்படியே எத்தனை காலத்திற்கு சொல்லி இளைஞர்களை ஏமாற்றுவீர்கள். எந்திரன் 2 படம் வெளிவருவதால்தான் சந்திப்பா? தமிழகத்தில் அணை கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்து ஏன் இன்னும் வழங்கவில்லை? காவிரி விவகாரத்தின் போது கர்நாடகாவில் தமிழர்களை அடித்து நொறுக்கியபோது, ஏன் குரல் கொடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது ஏன் குரல் கொடுக்கவில்லை? சமீபத்தில் டெல்லியில் தமிழக விவசாயிகளை ஆடை இல்லாமல் ஓட வைத்தனரே, அப்போது இவர் எங்கே சென்றார் போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தற்போது ரஜினியை சந்திக்க ரசிகர்கள் வருகிறார்கள் என்றாலும், அவர்கள் அனைவரும் எந்த வயதில் இருப்பவர்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இவர்கள் அனைவரும் 50 வயதுக்கு அதிகமானவர்கள் என்றே கூறப்படுகிறது. அப்போ இளைஞர்கள் ஆதரவு எங்கே போனது?

ரசிகர்களுடான சந்திப்பின்போது, மேடையில் அவரது இருக்கைக்குப் பின்னர் தாமரை இடம் பெற்றுள்ளது அனைவரின் கண்களை உறுத்தாமல் இல்லை. தாமரையின் மீது முத்திரையும் இடம் பெற்றுள்ளது.

இந்த அடையாளங்களை தரித்து ரஜினி எங்கே செல்கிறார்? என்பது மர்மமாக உள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய ஸ்டார் தலைவர் இல்லை என்பதாலும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதாலும், பாஜகவின் பிரதிநிதியாக ரஜினி நிறுத்தப்படலாம் என்றே தெரிகிறது. ஆனால், தமிழகத்திற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்யும். அதையும் ரஜினி எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பாஜகவின் தமிழக அரசியலும், தந்திரமும் புதிராகத்தான் உள்ளது. ஆனால், தமிழக மக்கள் ரஜினியிடம் இருந்து புதிரை எதிர்பார்க்கவில்லை. புதிருக்கு விடைதான் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசியலுக்கு இனி எந்த சினிமா ஸ்டார் வந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆக முடியாது என்பதுதான் உண்மை.
Actor Rajinikanth has hid himself behind Lotus!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்