ஆப்நகரம்

Suriya: சரவணனிலிருந்து சூர்யாவாக மாறியது இதனால்தான்.. மறுபேச்சே கிடையாது!

இனிவரும் காலங்களில் திரையரங்குகள் மற்றும் ஓடிடி இரண்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

Samayam Tamil 28 Oct 2021, 5:56 pm
சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil Suriya
Suriya


இந்நிலையில் 'ஜெய் பீம்' படத்தை விளம்பரப்படுத்த இணையம் வழியே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சூர்யா. அப்போது "கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உங்களுடைய படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. சினிமாவின் எதிர்காலமே இனி ஓடிடிதான் என முடிவு செய்துவிட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பதிலளித்த சூர்யா, நிச்சயமாகக் கிடையாது. இப்போது இருக்கும் நிலைமை, அடையாளம், சரவணனிலிருந்து சூர்யாவாக மாறியது என அனைத்துமே திரையரங்குகளில் படம் பார்த்து ஆசீர்வாதத்தால்தான் இப்படி இருக்கிறேன். இதற்கு மறுபேச்சே கிடையாது.

'வாடிவாசல்' படத்தில் இணையும் பிரபல இயக்குனர்: கன்பார்ம் பண்ணிய வெற்றிமாறன்!
இரண்டு ஆண்டுகள் மொத்தமாக முடங்கிவிட்டோம். ஒரு படம் செய்தால் அதில் 300 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது நேரடியான வேலை வாய்ப்பு. மறைமுகமாக சுமார் 1000 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நேரத்தில் 5 படங்களைத் தொடங்கினோம். அதன் மூலம் சுமார் 6000 குடும்பங்களுக்குச் சராசரியான வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் நடந்திருக்கும். நல்ல விஷயம் இதன் மூலமாக நடந்திருக்கிறது என்பதைத்தான் பார்க்கிறேன்.

அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள். 'எதற்கும் துணிந்தவன்', 'வாடிவாசல்' உள்ளிட்ட அனைத்துமே கொண்டாட வேண்டிய படங்கள். ஆனால், ஓடிடி என்பது எப்போதுமே இருக்கப்போகிற ஒரு விஷயம். இப்போது மக்களின் வாழ்க்கை முறையே மாறுகிறது. ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது செயலி மூலமாக ஆர்டர் செய்து வீட்டிலேயே சாப்பிடுகிறோம்.

திரையரங்குகள் மற்றும் ஓடிடி இரண்டுமே இருக்கும். எதற்கும் மரியாதையைக் குறைப்பவன் நானல்ல. மாற்றங்கள் வரும்போது அதற்கு பக்குவப்பட்டுக் கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். திரையரங்குகளுக்காக வேறு கதைகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிக்கவுள்ள கதைகளுக்கு விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் சூர்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்