ஆப்நகரம்

தமிழகத்தை உலுக்கிய சர்கார் சர்ச்சை; இவ்வளவு நடந்தும் ஏன் மௌனம் காக்கிறார் நடிகர் விஜய்!

சென்னை: சர்கார் பட விவகாரத்தில் இதுவரை நடிகர் விஜய் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 9 Nov 2018, 3:59 pm
கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் படங்கள் தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்தப் பட்டியலில் தற்போது ‘சர்கார்’ படமும் சேர்ந்துள்ளது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டு, கதைகளை உருவாக்கி படமாக்கி வருகிறார். ’சர்கார்’ படத்தில் கள்ள ஓட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
Samayam Tamil Vijay silent


இதைத் தொடர்ந்து வரும் கதையில் தற்கால அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசின் இலவச திட்டங்களால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பிகிறார். ஒரு காட்சியில் ஏ.ஆர்.முருகதாஸே இலவச மிக்ஸியை நெருப்பில் தூக்கி எறிவது போன்று நடித்துள்ளார். மேலும் வில்லி கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ள கோமளவல்லி என்ற பெயர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் என ஆளுங்கட்சி கூறியுள்ளது.

அவரது பெயரை களங்கப்படுத்தும் வகையில் இயக்குநர் செயல்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து ‘சர்கார்’ படத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பிரச்சனை முதலமைச்சர் பழனிசாமியிடம் கொண்டு செல்லப்பட்டது.

அதன்பிறகு ‘சர்கார்’ திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். முதலில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் படம் திரையிடலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை கண்டுகொள்ளாத திரையரங்குகள் முன்பு விஜய் பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. நடிகர் விஜய் படங்கள் நெருப்பில் போட்டு கொளுத்தப்பட்டன.

எச்சரிக்கையை மீறி ‘சர்கார்’ படத்தை ஒளிபரப்பிய திரையரங்கிற்குள் நுழைந்து, ஊழியர்களை தாக்கத் தொடங்கினர். அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாகக் கூறி, விஜய் ரசிகர்கள் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்ற பிறகும், நடிகர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பிற்கோ, சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தவோ முன்வரவில்லை.

இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் அதற்குள் படம் மறு தணிக்கைக்கு சென்று ஒப்புதல் பெறப்பட்டு, மீண்டும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சர்கார் படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தமிழக அரசே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்