ஆப்நகரம்

சியான் 60 ஸ்கிரிப்ட் முடிக்கவில்லை, திடீரென அமைந்தது இது: கார்த்திக் சுப்புராஜ்

விக்ரமின் அடுத்த படம் சீயான் 60 முன்பு திட்டமிடவில்லை, திடீரென விக்ரம் அழைத்ததால் அமைந்துள்ளது என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2020, 1:18 pm
நடிகர் சியான் விக்ரம் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு கேங்க்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. சியான் 60 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார் என்பதும் இவ்வளவு எதிர்பார்ப்பு எழுவதற்கு ஒரு முக்கிய காரணம்.
Samayam Tamil Chiyaan 60


ஆதித்ய வர்மா படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான துருவ் விக்ரம் அதற்குப் பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். ஆதித்ய வர்மா படத்தின் ஷூட்டிங் முழுவதும் விக்ரம் உடன் இருந்து அவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்த நிலையில் தற்போது இரண்டாவது படத்திலும் தனது அப்பா உடன் அவர் நடிக்க உள்ளார்.

சியான் 60 படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் விக்ரமுடனான படம் தான் திட்டமிடவே இல்லை என தெரிவித்துள்ளார். ஒருநாள் விக்ரம் கார்த்திக் சுப்புராஜை அழைத்து ஒரு ப்ராஜக்ட் பற்றி பேசலாம் என வரச் சொன்னாராம். விக்ரம் அழைத்து தனக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் அவர். அவரிடம் பல்வேறு கதைகளை விவாதித்ததாகவும் இறுதியில் ஒரு கதையை இறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் சியான் 60 படத்தின் கதையை எழுதி முடிக்கவில்லை என்றும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

அதனால் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க சில காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் தற்போது இயக்கி வரும் ஜகமே தந்திரம் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பெரும் பகுதி ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகளில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஈடுபட்டு வருகிறார். தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு தான் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கோப்ரா படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்புகளில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் கண்ணாடி முன் நின்று இருப்பது போலவும், அருகில் ஆறு விதமான கெட்டப்பில் இருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கோப்ரா ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக அது நிறுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இந்த பிரச்சனை நிறைவு பெற்று ஷூட்டிங் நடத்த தகுந்த சூழ்நிலை உருவான பிறகுதான் அங்கு சென்று ஷூட்டிங் நடத்த முடியும் என்கிற நிலைமை தற்போது உள்ளது. அதற்காகத்தான் படக்குழுவும் காத்திருக்கிறது.

விக்ரமின் மற்றொரு படமான பொன்னியின் செல்வன் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்று படமாக உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரமுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங்கும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசு அனுமதி கொடுத்த பிறகு அது தொடங்கப்படலாம் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்