ஆப்நகரம்

கொரோனா விஷயத்தில் அதே தவறை செய்துவிடாதீர்கள்: நடிகை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் குறித்து பியா பாஜ்பாய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 20 May 2020, 1:57 pm
கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் மூன்று முறை போன்று இல்லாமல் இம்முறை சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 4வது ஊரடங்கின்போது மக்கள் வேலைக்கு செல்கிறார்கள், கடைகளுக்கு பயமின்றி செல்கிறார்கள். அது எல்லாம் சரி தான். கொரோனா வைரஸ் பிரச்சனை முழுவதுமாக தீர்ந்துவிட்டது என்று அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை என்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை.
Samayam Tamil pia bajpai


இந்நிலையில் தான் நடிகை பியா பாஜ்பாய் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அவர் மட்டும் அல்ல கோலிவுட் பிரபலங்கள் சிலரும், நெட்டிசன்கள் பலரும் அதே போஸ்ட் போட்டுள்ளனர். அது என்னவென்றால்,
தளர்வுகளை கொடுத்திருப்பது அரசாங்கமே தவிர கொரோனா வைரஸ் இல்லை என்பது தான். 1918ம் ஆண்டு செய்த அதே தவறை மனித சமூகம் மீண்டும் செய்துவிடக் கூடாது.

1918ம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ 2 ஆண்டுகள் நீடித்தது. 3 கட்டங்களாக பரவி 500 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர், 50 மில்லியன் பேர் உயிர் இழந்தார்கள். இரண்டாவது முறை பரவியபோது தான் மக்கள் அதிக அளவில் உயிரிழந்தார்கள். குவாரன்டைன், சமூக விலகலால் மக்கள் கடுப்பாகி அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட உடன் சாலைகளில் சந்தோஷமாக சுற்றினார்கள். அதன் பிறகு 2வது முறை ஃப்ளூ பரவி பலர் உயிர் இழந்தனர். அதை கோவிட் 19 விஷயத்தில் செய்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் பியா பாஜ்பாய்.

பியா சொல்வது மிகச் சரி. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடன் மக்கள் கடைகள், பூங்காக்களுக்கு செல்லத் துவங்கிவிட்டனர். சமூக விலகல் என்பதை ஏற்கனவே மறந்துவிட்டார்கள். மாஸ்க் போடாமலேயே பலர் வெளியே சுற்றுகிறார்கள். கைகளை கழுவிக் கழுவி சோர்ந்துவிட்டோம் என்று கூறி அதையும் சிலர் கைவிட்டுவிட்டனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பிரச்சனை முற்றிலும் தீர்ந்துவிட்டது போன்று நடந்து கொள்கிறார்கள்.

4வது லாக்டவுன் அமலுக்கு வந்த பிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பொறுப்பின்றி இதே போன்று நடந்து கொண்டால் ஸ்பானிஷ் ஃப்ளூ விஷயத்தில் நடந்தது கோவிட் 19 விஷயத்திலும் நடந்துவிடக்கூடும். அப்படி எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே பலரின் பிரார்த்தனை.

இத்தனை நாட்களாக வீட்டில் முடங்கியிருந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் தற்போது பலரும் ஜாலியாக வெளியே சுற்றுவது புரிகிறது. ஆனால் வைரஸ் பிரச்சனை இன்னும் தீவிரமாக ஆகியிருக்கும் நேரத்தில் மக்கள் இப்படி செய்வது பலரின் உயிரை குடிக்க வழிவகுக்கும் என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

பியா பாஜ்பாய் போட்ட ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் பாதுகாப்பாக இருங்கள் என்று யார் சொன்னாலும் கடுப்பாகும் நிலையில் உள்ளனர் மக்கள். வீட்டில் அடைந்து கிடந்த கடுப்பில் அவர்கள் பெரிய பிரச்சனையில் சிக்காமல் இருந்தால் சரி என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்