ஆப்நகரம்

சாப்பாட்டுக்கே வழி இல்லை, யாராவது உதவுங்களேன்: காலா, கைதி பட நடிகர் கோரிக்கை

கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கிறார் சூர்யகாந்த்.

Samayam Tamil 16 Aug 2020, 12:11 pm
பாக்யராஜின் இன்று போய் நாளை வா, தூரல் நின்னு போச்சு, ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன், கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, ஜெய்ஹிந்த், விரலுக்கேத்த வீக்கம், காதல் ரோஜாவே, பாய்ஸ், அந்நியன், சிங்கம், காலா, வட சென்னை, கைதி, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சூர்யகாந்த்.
Samayam Tamil suryakanth


வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் கடந்த 4 மாதங்களாக நடக்கவில்லை. இதனால் அன்றாடம் உழைத்து சாப்பிடும் கலைஞர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள சினிமாக்காரர்களுக்கு பிரபலங்கள் அரிசி, பருப்பு, பணம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். இருப்பினும் பலர் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யகாந்தும் பணக் கஷ்டத்தில் இருக்கிறார்.

அவர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருகிறாராம். சூர்யகாந்துக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. மருந்து மாத்திரைகள் வாங்கக் கூட பணம் இல்லையாம். சாப்பிட வழியில்லாமல் தவிக்கும் தனக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. படத்தில் சூர்யகாந்தை பார்த்தவர்கள், அய்யோ பாவம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கிறாராம். திரையுலகினர் உதவி செய்தால் நன்றாக இருக்கும். இது பற்றி தெரிய வந்தால் கார்த்தி, சூர்யா கண்டிப்பாக சூர்யகாந்துக்கு உதவி செய்வார்கள்.

மேலும் ராகவா லாரன்ஸின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அவர் நிச்சயமாக அரிசி, பருப்பு, பணம் கொடுப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது முடிவது, எப்பொழுது படப்பிடிப்புகள் துவங்குவது என்று திரையுலகை சேர்ந்த சிலர் காய்கறி கடை வைப்பது, சாப்பாட்டுக் கடை வைப்பது, மளிகைக் கடை வைப்பது, விவசாயம் செய்வது என்று வேறு தொழில்களை செய்யத் துவங்கிவிட்டனர்.

எந்த தொழிலும் குறைவானது இல்லை. சினிமா மூலம் வருமானம் இல்லாத நேரத்தில் கவுரவம் பார்க்காமல் நேர்மையான முறையில் சம்பாதிப்பதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தரம் தாழ்ந்து பேசும் மீரா மிதுன்: தன் ஸ்டைலில் சூர்யா நெத்தியடி

அடுத்த செய்தி

டிரெண்டிங்