ஆப்நகரம்

பிரபல கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு: திரையுலகினர் இரங்கல்!

பிரபல கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார்.

Samayam Tamil 17 Sep 2021, 11:50 am
தமிழ் திரையுலகில் பாடலாசிரியராகவும், காமராஜரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய பிரபலமான கவிஞர் பிரான்சிஸ் கிருபா. இவர் நேற்று நள்ளிரவு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil Francis_Kiruba
Francis_Kiruba


திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் பிரான்சிஸ் கிருபா. மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், உள்ளிட்ட பல பிரபலமான கவிதைகளை படைத்துள்ளார். நவீன கவிதை எழுத்தாளர் என்கிற தனி சிறப்பும் இவருக்கு உண்டு.

கவிதை மட்டுமன்றி வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில், திரைக்கதை மற்றும் வசனம் எழுதி பிரபலமானார்.

இளவரசியின் ஆணை நிறைவேறியது: 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பை முடித்த வந்தியத்தேவன்!
பிரான்சிஸ் கிருபாவிற்கு 'கன்னி' எனும் புதினத்திற்கு 2007 ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் சிறந்த புதினம் விருது கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது, 'சம்மனசுக்காடு' கவிதைத் தொகுப்புக்காக சுஜாதா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பிரான்சிஸ் கிருபா, நேற்று நள்ளிரவு திடீர் என உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பல எழுத்தாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்