ஆப்நகரம்

இந்தி தெரியாததால் டெல்லி ஏர்போர்ட்டில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை

இந்தி பேசத் தெரியாததால் இயக்குநர் வெற்றிமாறனை டெல்லி விமான நிலையத்தில் அவமதித்துள்ளனர்.

Samayam Tamil 4 Sep 2020, 8:30 am
தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று தொடர்ந்து வித்தியாசமான படங்களாக கொடுத்துள்ளார். வெற்றிமாறன் படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்று பெயர் எடுத்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெற்றிமாறனுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HBDVetrimaaran என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil vetrimaaran


இந்நிலையில் இந்தி தெரியாததால் தான் டெல்லி விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த பேட்டியில் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது,

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தோம். டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன் பிரிவில் இருந்தவர் என்னிடம் இந்தியில் பேசினார். எனக்கு இந்தி தெரியாது என்று நான் அவரிடம் ஆங்கிலத்தில் கூறினேன்.

அதற்கு அவரோ, இந்த நாட்டின் தாய்மொழி உங்களுக்கு தெரியாதா என்று கேட்டார். என் அம்மா பேசும் மொழி தமிழ். அதனால் அது தான் என் தாய்மொழி. பிறரிடம் பேச எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

நான் கூறியதை கேட்ட அந்த நபருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கள் எல்லாம் இப்படித் தான். நீங்கள் தமிழர்களும், காஷ்மீர் மக்களும் தான் இந்த நாட்டை பிரிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிங்க என என்னவெல்லாமோ பேசி என்னை தனியாக நிற்க வைத்துவிட்டார்.

கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடாவுக்கு போயிட்டு வருகிறோம். இவர் இந்த ஆண்டு தேசிய விருது வாங்கிய இயக்குநர் என்று என்னுடன் வந்திருந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் அந்த நபரிடம் எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை. 45 நிமிடம் என்னை தனியாக நிற்க வைத்தார். அதன் பிறகு வேறு ஒரு அதிகாரி வந்து என்னை போகச் சொன்னார்.

என் தாய்மொழியில் நான் பேசுவது எப்படி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்?. என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி இந்த நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் வெற்றிமாறன்.

இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். இந்தி எப்படி இந்த நாட்டின் தாய் மொழியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். வெற்றிகரமான இயக்குநருக்கே இந்த கதி என்றால் சாதாரண ஆட்களின் நிலை என்னவாகும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் உடன் இணைகிறேனா? வெற்றிமாறன் சொன்ன பதில்

அடுத்த செய்தி

டிரெண்டிங்