ஆப்நகரம்

Happy Birthday Dhanush: நடிப்பு ராட்சசன் தனுஷுக்கு பிறந்தநாள் - இந்த வருஷமாவது உங்களின் 'அந்த' ஆசை நிறைவேறட்டும்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Samayam Tamil 28 Jul 2020, 9:32 am
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட தனுஷ் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #HappyBirthdayDhanush என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil dhanush


அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படம் மூலம் ஹீரோவானார் தனுஷ். அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நடிக்க வந்த புதிதில் படப்பிடிப்பு தளத்தில் கூடியிருந்தவர்கள் இந்த ஆளு எல்லாம் ஹீரோவா என்று தனுஷின் காதுபடவே கிண்டல் செய்திருக்கிறார்கள். அதை கேட்டு மனம் வருந்தினாலும் நானும் ஒரு நாள் சாதிப்பேன் என்று தனக்கு தானே தைரியம் சொல்லி நடித்திருக்கிறார் தனுஷ்.

தனுஷ் நடிப்பதற்கு மட்டும் அல்ல டான்ஸ் ஆடுவதற்கும் பெயர் போனவர். திருடா திருடி படத்தில் வந்த மன்மத ராசா பாடலுக்கு தனுஷ் போட்ட ஆட்டம் இன்றும் பிரபலம். மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம். காதல் கதைகளில் கவனம் செலுத்தி வந்த தனுஷ் ஒரு கட்டத்தில் தன் பாதையை மாற்றினார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கத் துவங்கினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் அவர் கெரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தமிழ் திரையுலகில் தன் வித்தியாசமான நடிப்பால் ஒரு இடத்தை பிடித்த தனுஷ் பாலிவுட் சென்றார். ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். சும்மா, சும்மா பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நடிப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்தார். யார் இந்த நடிகர் என்று இந்தி ரசிகர்கள் அசந்து போனார்கள். அதன் பிறகு பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்தார். லாக்டவுனுக்கு முன்பு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கானுடன் சேர்ந்து நடித்து வந்தார். அந்த படத்தின் ஷூட்டிங்கை வரும் அக்டோபர் மாதம் மதுரையில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

பாலிவுட் சென்ற தனுஷ் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படம் மூலம் ஹாலிவுட்டும் சென்றார். நடிகராக கோலிவுட்டுக்கு வந்த தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அவர் ராஜ்கிரணை வைத்து இயக்கிய ப. பாண்டி பலருக்கும் பிடித்த படமாக அமைந்துவிட்டது. அது தனுஷ் இயக்கிய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது.

படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் தனுஷ். படங்களில் பாடுவது, பாடல்கள் எழுதுவது என்று தன் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தனுஷ் நடிப்பை பார்த்து அசந்து போகாதவர்களே இல்லை எனலாம். விருதுகள் எல்லாம் தனுஷிடம் செல்லவே ஆசைப்படுகின்றன.

ஜாலியான கதாபாத்திரம் முதல் சீரியஸான கதாபாத்திரம் வரை எதுவாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறுவதற்கு பெயர் போனவர் தனுஷ். அவரை வைத்து படம் எடுக்க பல இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். அவருக்கு தன் மாமனார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. அந்த ஆசை இந்த ஆண்டாவது நிறைவேறட்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்