ஆப்நகரம்

பருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்! பிறந்தநாள் ஸ்பெஷல்

நடிகர் கார்த்தி இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சில படங்கள் பற்றி பார்ப்போம்.

Samayam Tamil 25 May 2020, 8:33 am
தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமிக்கும் அளவுக்கு பல படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியிருப்பவர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி போன்ற அடையாளங்களோடு சினிமாவில் அவர் நடிக்க வந்தாலும் அவரது நடிப்பு திறமை மட்டும் தான் அவரை தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக வளர உதவியுள்ளது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது போல இரண்டாம் தலைமுறை நடிகரான கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரனிலேயே மிக நேர்த்தியான நடிப்பை காட்டியிருப்பார்.
Samayam Tamil Paruthiveeran


மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்த பிறகு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற கார்த்தி எம்எஸ் Industrial Engineering படிப்பை முடித்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதன் பிறகு பிலிம் மேக்கிங் படிப்பை முடித்தார்.

இன்று மே 25ம் தேதி கார்த்தியின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 10 வருடத்தை தாண்டிய கார்த்தியின் கெரியரில் அவர் நடிப்பால் மிரட்டிய சில படங்கள் பற்றி பார்ப்போம்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய அவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தார். சூர்யா நடித்த ஆயுத எழுத்து படத்தில் மணி ரத்னத்தின் உதவியாளராக பணியாற்றிய அவர், அதே படத்தில் நடித்தும் இருப்பார். அது தான் கார்த்தியின் முதல் படமாக அமைந்தது.

அதன் பிறகு ஹீரோவாக பருத்தி வீரன் படத்தில் தான் கார்த்தி முதன்முதலில் நடித்திருந்தார். அமீர் இயக்கியிருந்த அந்த படத்தில் கார்த்தியின் தோற்றமே பலருக்கும் ஆச்சரியமளித்தது. அமெரிக்காவில் இருந்து கிளீன் ஷேவ் தோற்றத்தில் வந்திறங்கிய அவரை அமீர் இப்படி மாற்றிவிட்டாரே என்ற பேச்சும் அப்போது வந்தது. அதே படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு ரோலில் நடித்து இருந்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது அனைவரும் அறிந்ததே.

அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார் கார்த்தி. சோழ வாரிசையும், பாண்டியர்களின் குலதெய்வச் சிலையையும் கண்டுபிடிக்க கிளம்பும் குழுவில் இருப்பவராக கார்த்தி அந்த படத்தில் நடித்திருப்பார். அந்த படம் ரிலீஸ் ஆன போது சில மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும், தற்போதும் ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகம் வருமா என செல்வராகவனிடம் கேட்பதுண்டு.

அதன் பிறகு கார்த்தி நடித்த பையா படம் அப்படியே அவரது இமேஜை லவ்வர் பாயாக மாற்றிவிட்டது. கிராமத்து லுக்கில் பருத்தி வீரன் படத்தில் நடித்த கார்த்தியா இது என்று கூட பலருக்கும் தோன்றியிருக்கும். லிங்குசாமி இயக்கி தயாரித்து இருந்த அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.


அதன் பிறகு சிவா இயக்கத்தில் சிறுத்தை படத்தின் மூலமாக மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்தார் கார்த்தி. டபுள் ரோலில் நடித்திருந்தார் அவர். மாஸான போலீஸ் அதிகாரியின் ரோல் ஒருபுறம், காமெடியான திருடன் ரோல் மறுபுறம் என இரண்டிலும் நடிப்பில் கலக்கியிருப்பார் கார்த்தி.

அதன் பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என சில சறுக்கல்களை சந்தித்தார் கார்த்தி. மீண்டும் மெட்ராஸ் படம் மூலமாக வெற்றிகண்டார். வட சென்னை பையனாக ஓரளவுக்கு பாடி லாங்குவேஜ், பேச்சு என மெனக்கெட்டு நடித்திருப்பார் கார்த்தி.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் கார்த்தி. ஹெச் வினோத் அந்த படத்தினை இயக்கியிருந்தார். கார்த்தி கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படங்களில் இதுவும் ஒன்று. ஒரு உண்மை கதையை எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து இயக்கி இருப்பார் வினோத். திருடர்களை பிடிக்க ஒரு போலீஸ்காரர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை அப்படியே ரசிகர்கள் கண் முன் கொண்டு வந்திருப்பார். கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்களில் இதுவும் ஒன்று.


கைதி.. கடைசியாக தம்பி படத்திற்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் இது தான். சென்ற வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது இந்த படம். பல வருடங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவராக சற்று வயதான தோற்றம், மகளுக்காக ஏக்கம், மகளை பார்ப்பதற்காக எதையும் செய்ய துணிவது வரை கார்த்தி தனது மிளிர்ச்சியான நடிப்பால் நம்மை வெகுவாக கவர்ந்திருப்பார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்