ஆப்நகரம்

Cobra Movie: கோப்ரா படத்தில் எனது ரோல் இது தான்! இர்பான் பதானின் புகைப்படங்கள் வைரல்

கோப்ரா படத்தில் நடித்துள்ள இர்பான் பதானின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி உள்ளது.

Samayam Tamil 27 Jul 2020, 1:48 pm
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்பில் நடிக்க உள்ளார் என படம் துவங்கியதில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஒரு ரெட்ரோ லுக்கில் சியான் விக்ரம் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது.
Samayam Tamil Irfan Pathan in Cobra


அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் இர்பான் ரயில்வே டிராக்கில் நின்று கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்கள் கோப்ரா பட ஷூட்டிங் கொல்கத்தாவில் நடைபெற்றபோது எடுக்கப்பட்டதாக இர்பான் கூறி உள்ளார். இந்த படத்தில் இர்பான் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இர்பான் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தான் ஒரு இன்டர்போல் அதிகாரியாக நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இர்பான் பதான் சினிமாவில் களமிறங்கி உள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. நடிப்பில் அவர் ரசிகர்களை கவர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பதான் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக பணியாற்றி வருகிறார்.

ரசிகர்களை கவர்ந்து வரும் கோப்ரா படத்தின் புகைப்படங்கள் இதோ..


இதற்கு முன்பு சியான் விக்ரம் உடன் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் இர்பான் பேசியிருந்தார், 'விக்ரம் பற்றி எனக்கு பிடித்த ஒரு விஷயம் என்னவென்றால் அவர் இவ்வளவு வெற்றி பெற்ற பிறகும் மிகவும் எளிமையாக இருக்கிறார். அவரை நான் எப்போது செட்டில் சந்தித்தாலும் அந்த நேரம் மிகவும் அழகானதாக இருக்கும்' என கூறியிருந்தார்.

பதான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய பகுதிகளை கடந்த ஜனவரி மாதமே நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ. ஆர். ரஹ்மான் கோப்ரா படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் தும்பி துள்ளல் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தில் வரும் ஒரு திருமண கொண்டாட்ட பாடலாக அது அமைந்திருந்தது.

கோப்ரா படத்தின் ஷுட்டிங் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. அங்கு கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டியதாகி விட்டது என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். கோப்ராவை கொரோனா தாக்கிவிட்டது என கிண்டலாக அவர் பதிவிட்டு இருந்தார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்புகளில் நடிக்கும் நிலையில் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏழு விதமான கெட்டப்புகள் காட்டப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மீதமிருக்கும் கெட்டப்புகளில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரம் ஜோடியாக இந்த அப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் முக்கிய ரோல்களில் மிர்ணாளினி, லால், கனிகா, பத்ம பிரியா, பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்