ஆப்நகரம்

லோகேஷ் - கமல் இணையும் “எவனென்று நினைத்தாய்”.. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனுடன் தான் இணையும் படம் ‘எவனென்று நினைத்தாய்’ அறிவிப்பை போஸ்டர் உடன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Sep 2020, 8:44 am
மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக நேற்றே அறிவித்து இருந்தார். அதன்படி சற்றுமுன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
Samayam Tamil Lokesh Kanagaraj and Kamalhaasan


கமல்ஹாசன் உடன் தான் லோகேஷ் கூட்டணி சேர்கிறார். வெளியாகி இருக்கும் போஸ்டரில் இது கமல்ஹாசனின் 232வது படம் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதனை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

அனிருத் தான் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அவர் கமல்ஹாசனுடன் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கிறார்.


அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இந்த படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்க்கு முன்பே இது ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. மேலும் கமலின் இந்தியன் 2 படமும் தற்போது தயாராகி வரும் நிலையில் அதற்கு முன்பே இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு எவனென்று நினைத்தாய் என பெயரிடப்பட்டு உள்ளது. விஸ்வரூபம் படத்தின் பாடல் துவங்கும் வரியில் இருந்து தான் இந்த டைட்டில் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் போஸ்டரில் "Once upon a time there lived a ghost" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கமலின் முகம் முழுவதும் அதிக துப்பாக்கிகள் கொண்டு தான் போஸ்டர் உருவாக்கப் பட்டுள்ளது. 'Ghost' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால் கமலின் கதாபாத்திரம் மிகவும் வித்யாசமான ஒருவராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு 'எவனென்று நினைத்தாய்' என பெயரிடப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என நேற்று மாலையில் இருந்தே ஒரு செய்தி பரவி வந்தது. அதனை தான் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

"ஆண்டவருக்கு நன்றி" என கமலுக்கு ட்விட்டில் நன்றி கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி கூறி இருக்கிறார்.

இந்த அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் ஹாசன் ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வருகிறார்கள். அது ஒரு புறம் இருக்க சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் பற்றிய ஒரு விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்த போஸ்டர் மெக்கானிக் என்ற ஹாலிவுட் பட போஸ்டரின் காபி என சிலர் கூறி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்