ஆப்நகரம்

விஜய் பிறந்தநாளுக்கு தியேட்டரில் ரீ-ரிலீஸ் ஆகிறது சூப்பர்ஹிட் படம்! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் பிறந்தநாளை கொண்டாட பிகில் படத்தை ரசிகர்கள் மீண்டும் வெளியிட உள்ளனர். இந்தியாவில் இல்லை, எந்த நாட்டில் என பாருங்கள்.

Samayam Tamil 17 Jun 2020, 7:31 pm
தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி என்பதால் அதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் விஜய்யை வாழ்த்தி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பலவற்றையும் பார்க்க முடிகிறது. இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கின்றன.
Samayam Tamil Master


வழக்கமாக விஜய் பிறந்த நாளன்று அவரது சூப்பர் ஹிட்டான படங்களை தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு உள்ளதால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிகில் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்துள்ளது. இதனால் அங்கு உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


21-ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பிகில் படம் வெளியிடப்படவுள்ளது என கூறி உள்ளனர். இது கொரோனா தொற்று பரவும் பிரச்சனை அதிகம் உள்ள நேரம் என்பதால் அதிக பாதுகாப்பு நடவடிக்கைள் உடன், அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அந்த படம் தாமதமானது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. அட்லீ இயக்கிய பிகில் படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.


மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் ஆனால் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளுக்கு மாஸ்டர் படக்குழுவினரிடம் இருந்து ஏதாவது முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும் ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது இயக்குனராக ஏ.ஆர். முருகதாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஹீரோயினாக யார் நடிக்கப் போவது என்பது பற்றி உறுதிப்படுத்தாத தகவல்கள் பல உலா வருகின்றன. மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் தளபதி65 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், இன்று தளபதி 65 ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் தான் தெரியவரும்.

ராஷ்மிகா விஜய்யுடன் நடிக்க ஆசை என பலமுறை வெளிப்படையாகவே ட்விட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்