ஆப்நகரம்

ஒத்தையடி பாதையிலிருந்து ஒத்த செருப்பு வரை: ஊடக நண்பர்களுக்கு பார்த்திபன் வேண்டுகோள்!

தனது அடுத்த படைப்பான 'இரவின் நிழல்' படத்தின் முயற்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்று பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பார்த்திபன்.

Samayam Tamil 27 Oct 2021, 2:34 pm
கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெறும் வகையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எஃபெக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் பத்திரிக்கை, ஊடகவியலாளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
Samayam Tamil Parthiban
Parthiban


அதில், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம் !
இந்த நண்பர்களுக்கு என்று சொல்வதில் ஒரு ஸ்பெஷல் அர்த்தம் இருக்கிறது, வெறும் பத்திரிக்கையாளர்களாக, ஊடகவியலாளர்களாக இல்லாமல், எப்போதும் எனக்கு நண்பர்களாகவே நீங்கள் இருக்கிறீர்கள். 'உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் கலைவதாம் நட்பு' எனும் குறளுக்கேற்ப, என் தோல்விப்படங்கள் என்னுடைய வெற்றிப்படங்களை கணக்கிட்டால் வர்த்தக ரீதியாக எனது தோல்விப்படங்களே அதிகமாக இருக்கும் ஆனால் அதிலும் நான் ஏதாவது குடைக்குள் மழை போல், சிறிய அளவிலாவது புதிய முயற்சிகளை செய்திருப்பேன்.

ஒத்தையடி பாதையிலிருந்து ஒத்த செருப்பு வரை என்னுடைய பயணத்தை மிக இலகுவான நெடுஞ்சாலை பயணமாக்கியதில் பத்திரிக்கையாளர்களின் பங்கே அதிகம். துவண்டு கிடக்கும் போது, தோல்வியில் இருக்கும் போது தோள் கொடுப்பவர்களை தான், நாம் நன்பர்கள் என்று சொல்வோம். அந்த வகையில் என்னைப் பற்றி தொடர்ந்து ஒரு நற்செய்தி, எங்காவது ஒரு பத்திரிக்கையில் வந்து கொண்டே இருக்கும். அது எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும். சில நேரங்களில், என் படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகும் காலங்களில் கூட, எனக்கு பத்திரிக்கைகள் ஊக்கம் தந்திருக்கின்றன. எனது முயற்சிகளை பாராட்டியுள்ளன.

என்னை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினி நெகிழ்ச்சி!
தற்போது தேசிய விருது வாங்கும் அளவிலான படத்தை செய்வதற்கு என் தோளோடு தோளாக, உடனிருந்து உற்சாகப்படுத்தியது அவர்கள் தான். இப்போது தான் வெற்றியை நோக்கிய எனது பயணம் துவங்கியிருக்கிறது. ஒவ்வொரு படமும் செய்யும் போது அதை எனது இறுதிப்படமாகவே நினைத்து செய்வேன். எனது முழு உழைப்பையும் அதற்கு தருவேன். தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை அப்படம் வெல்ல வேண்டும் என முயற்சிப்பேன். அம்மாதிரியான முயற்சிகளில் பத்திரிக்கை தரும் பாராட்டு பெரும் மகிழ்ச்சியை தரும். இம்மாதிரி முயற்சிகளை நான் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன்.

அப்படியான எனது அடுத்த முயற்சி தான் “இரவின் நிழல்” நான் படத்தை பார்த்து விட்டேன். அதற்கடுத்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பார்த்து விட்டு, பிரமித்து என்னை பாராட்டினார். இப்போது இசையமைக்க ஆரம்பித்துள்ளார். இதன் முதல் பிரதியை, முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன். அடுத்து “ஒத்த செருப்பு” படத்தை இந்தியில் என் ஆதர்ஷ நாயகன் அமிதாப்பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சனை நாயகனாக வைத்து இயக்கியுள்ளேன். 'இரவின் நிழல்' படத்தை உங்களுக்கு தான் முதலில் காட்ட விரும்புகிறேன். ஒத்த செருப்புக்கு இன்னும் எத்தனை பெருமைகள் கிடைத்தாலும் அது உங்களையே சாரும். அதே போல் எனது அடுத்தடுத்த முயற்சிகளையும் நீங்கள் பாராட்டுவீர்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்