ஆப்நகரம்

கொரோனா சிகிச்சைக்காக வந்த அர்ஜுன் ரெட்டி வினியோகஸ்தர், தந்தை சாலை விபத்தில் பலி

பிரபல தெலுங்கு பட வினியோகஸ்தர் கமலாகர் ரெட்டி மற்றும் அவரின் தந்தை நந்தகோபால் ரெட்டி ஆகியோர் சாலை விபத்தில் பலியாகினர்.

Samayam Tamil 20 Aug 2020, 10:02 am
தெலுங்கு திரையுலகின் முன்னணி வினியோகஸ்தர்களில் ஒருவர் கமலாகர் ரெட்டி(48). கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட கே.எஃப்.சி. என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் ஆவார். தீபிகா படுகோன் நடித்த பத்மாவத், விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி, ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா மற்றும் பல ஹாலிவுட் படங்களை ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வினியோகம் செய்துள்ளார்.
Samayam Tamil accident


கமலாகர் ரெட்டியின் தந்தை நந்தகோபால் ரெட்டிக்கு (75) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள். அதன் பிறகு நந்தகோபால் ரெட்டியின் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் நெல்லூரில் இருந்து ஹைதராபாத்துக்கு கிளம்பினார்கள்.

ஆம்புலன்ஸில் தந்தையுடன் கமலாகர் ரெட்டியும் பயணம் செய்தார். ஆம்புலன்ஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லி செக்போஸ்ட் அருகே வந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் கமலாகர் ரெட்டியும், அவரின் தந்தை நந்தகோபால் ரெட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கமலாகர் ரெட்டி மற்றும் நந்தகோபால் ரெட்டி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மிர்யலகுடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்த செய்தி அறிந்த தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கமலாகர் ரெட்டி மற்றும் நந்தகோபால் ரெட்டியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
சுமார் 25 ஆண்டுகளாக பட வினியோகஸ்தராக இருந்து வந்தார் கமலாகர் ரெட்டி. அவர் சோனி பிக்சர்ஸ், வியகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், வார்னர் பிரதரஸ் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து பட வினியோகம் செய்திருக்கிறார்.

எஸ்.பி.பி.யின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

அடுத்த செய்தி

டிரெண்டிங்