ஆப்நகரம்

பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்ற ரஜினி

சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொன்னம்பலத்திற்கு கமலை அடுத்து ரஜினிகாந்தும் நிதியுதவி செய்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2020, 10:00 am
ஸ்டண்ட் கலைஞராக தனது சினிமா பயணத்தை துவங்கிய பொன்னம்பலம் பின்னர் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். உலக நாயகன் கமல் ஹாஸனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
Samayam Tamil rajinikanth


ரஜினிகாந்தின் முத்து, அருணாச்சலம், அஜித்தின் அமர்க்களம், விஜய்யின் கில்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் பொன்னம்பலம் பேசிய வசனங்கள் இன்றளவும் பிரபலம். ஜெயம் ரவியின் கோமாளி தான் பொன்னம்பலம் நடிப்பில் கடைசியாக வெளியான படம்.

படங்களில் வில்லனாக வந்து மிரட்டும் பொன்னம்பலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்து கொண்டார். டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அறிந்த கமல் ஹாஸன் பொன்னம்பலத்திற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார். மேலும் பொன்னம்பலத்தின் இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுள்ளார் கமல். பொன்னம்பலத்திற்கு தினமும் போன் செய்து நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பொன்னம்பலம் மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்குடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள் பொன்னம்பலம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கமலை அடுத்து தற்போது ரஜினியும் பொன்னம்பலத்திற்கு நிதியுதவி செய்துள்ளார். இது பற்றி பொன்னம்பலம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

என் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக் கொண்டுள்ளார். எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான செலவை ரஜினி சார் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

பொன்னம்பலத்தின் நிலை குறித்து தெரிய வந்ததும் ரஜினி அவருக்கு போன் செய்து பேசியதுடன், சிகிச்சைக்கான செலவை ஏற்றுள்ளார். ஆனால் ரஜினி எவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார் என்கிற தகவலை வெளியிடவில்லை. பொன்னம்பலம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக ரஜினி அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் இரண்டு பெரிய ஆட்கள் போன் செய்து ஆறுதல் சொன்னதுடன், சிகிச்சைக்கான செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றதை பார்த்து பொன்னம்பலம் நிம்மதி அடைந்துள்ளாராம். தக்க நேரத்தில் ரஜினி மற்றும் கமல் செய்துள்ள உதவியை பார்த்து ரசிகர்கள் அவர்களை மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொன்னம்பலத்தை ஆக்சிஜன் மாஸ்குடன் பார்த்த ரசிகர்கள் அவருக்கு கொரோனாவோ என்று நினைத்து பயந்துவிட்டனர். பொன்னம்பலத்தற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அது ஏன் தமிழகத்தில் பலருக்கும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். யாராவது காரணம் தெரிந்தால் சொல்லுங்கள். தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று சமூக வலைதளவாசிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்