ஆப்நகரம்

பிறந்தநாள் பெரிய விஷயம் இல்லை: எஸ்.பி.பி வீடியோ வெளியிட்டு உருக்கமான வேண்டுகோள்

பிறந்தநாள் வாழ்த்து கூறி பூங்கொத்து உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டாம் என பாடகர் எஸ்.பி.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Samayam Tamil 4 Jun 2020, 3:26 pm
இன்று ஜூன் 4ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil S. P. Balasubrahmanyam


இந்நிலையில் தனக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி பூங்கொத்து உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் உயிரிழப்புகளை சந்தித்து வரும் நிலையில் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

இது பற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது..

"அன்பு நெஞ்சங்களுங்கு வணக்கம். ஜூன் 4ம் தேதி என்னுடைய பிறந்தநாள். முதற்கண் என் தாய் தந்தையாருக்கும், என் குருநாதர்கள் எல்லோருக்கும் வணங்குகிறேன். தயவு செய்து அந்த நாளோ, அதற்கு பிறகு, அதற்கு முந்திய நாளோ எனக்கு வாழ்த்து அனுப்புவதோ, பூங்கொத்துகள் அனுப்புவதோ, போன் செய்து என்னை ஆசீர்வதிப்பதோ தயவு செய்து பண்ணாதீங்க. ஒருவேளை நீங்கள் அப்படி பண்ணாலும் நான் அதற்கு பதில் கொடுக்கமாட்டேன்."

"பெரிய விஷயம் இல்லை நான்காம் தேதி எஸ். பி. பாலசுப்ரமணியம் பிறந்தது. உலகம் எல்லாம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கு. நீங்க.. உங்களால் முடிந்தால்.. சாப்பாடு இல்லாமல் ரொம்ப கஷ்ட படுபவர்கள் இருக்கிறார்கள், அவங்களுக்கு கொஞ்சம் சோறு போடுங்க. உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை பண்ணுங்க. இந்த உலகம் இப்போதும் இருக்கும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வெளியில் வர வேண்டும். இந்த கொரோனாவில் இருந்து எல்லோரும் விடுவிக்கப்பட வேண்டும். எல்லோரும் சாந்தி மயமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை பண்ணுங்க."

"என்னுடைய அபிப்பிராயத்தை மன்னியுங்க. அதரவு பண்ணி நான் சொன்னதை செய்யுங்க. வணக்கம். வணக்கம். வணக்கம்" என கூறி உள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.


தமிழ் சினிமா ரசிகர்களை தனது குரலால் வசீகரித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர். அவர் அப்பா மூலமாக இவருங்கு இசையின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. 1966ம் வருடத்தில் முதலில் ஒரு தெலுங்கு பாடல் பாடினார் அவர். அதன் பின் தமிழுக்கு வந்த அவர் முதலில் ஒரு பாடல் பாடினார், ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. பிறகு எம்.ஜி.ஆரின் அடிமை பெண் படத்திற்காக 'ஆயிரம் நிலவே வா' உட்பட பல பாடல்கள் பாடி தனது குரலால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின் தமிழ் சினிமாவையே தனது குரலால் பல வருடங்கள் கலக்கினார் அவர். இதுவரை பல மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடி உள்ளார் அவர்.

அவர் பாடத்துவங்கி தற்போது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது எஸ்பிபி-யின் குரல் அப்படியேத்தான் இருக்கிறது என பலரும் கூறுவதை கேட்டிருப்போம்.

சமீபத்தில் அவர் குரலில் பேட்ட படத்தில் 'மரண மாஸ்' பாடலை அவர் பாடி இருந்தார். ஆனால் அதில் அவரை விட அனிருத்தின் குரல் தான் அதிகம் இருந்தது. அதனால் அனிருத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். ஆனாலும் அந்த பாடலை பாடியது தனக்கு மகிழ்ச்சியான விஷயம் தான் என SPB பேட்டி அளித்து இருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்