ஆப்நகரம்

ஏழை மாணவர்களுக்கு சூர்யா ரூ.2.5 கோடி உதவிதொகை! பெறுவது எப்படி? முழு விவரம்

கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சூரரைப் போற்று படத்தினை ottயில் ரிலீஸ் செய்வதன் மூலம் கிடைத்துள்ள பணத்தில் 2.5 கோடி ரூபாயை மாணவர்களுக்கு உதவி தொகையாக வழங்க உள்ளார்.

Samayam Tamil 31 Aug 2020, 5:36 pm
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடி இணையத்தளம் ஒன்றில் வெளியாக உள்ளது என சமீபத்தில் சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். மேலும் அதன் மூலமாக வரும் பணத்தில் தான் 5 கோடி ரூபாயை பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் உதவித் தொகையாக வழங்க போவாதாக கூறி இருந்தார்.
Samayam Tamil Suriya


அதனை தொடர்ந்து 1.5 கோடி ரூபாயை முதலில் சினிமா சங்கங்களுக்கு அவர் அளித்தார். FEFSI சங்கம், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றிற்கு அவர் இதை பிரித்து கொடுத்திருந்தார். அடுத்து மீதி இருக்கும் தொகையை அவர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உதவி தொகையாக வழங்க உள்ளார்.

அது பற்றி சூர்யா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது..

"அனைவருக்கும் வணக்கம். 'ஈதல் இசைபட வாழ்தல்' என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு 'கைப்பிடி அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

பொதுமக்கள், 'திரைத்துறையினர், 'கொரானா தொற்றிலிருந்து' மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி 'கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு' பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவதுறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது, மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


'கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்' என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும். அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைகான தேர்வு அமையும். agaram இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சூர்யா கூறி உள்ளார்.

மேலும் இந்த உதவி தொகை பெறுவதற்கான படுவதையும் அவர் அதில் இணைத்துள்ளார்.கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சூரரைப் போற்று படத்தினை ottயில் ரிலீஸ் செய்வதன் மூலம் கிடைத்துள்ள பணத்தில் 2.5 கோடி ரூபாயை மாணவர்களுக்கு உதவி தொகையாக வழங்க உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்