ஆப்நகரம்

தற்கொலை செய்து கொண்ட ரசிகரின் குடும்பத்துடன் போனில் பேசிய தளபதி விஜய்! என்ன கூறினார்?

தற்கொலை செய்து கொண்ட பாலா என்ற ரசிகரின் குடும்பத்தினரிடம் போனில் பேசி இருக்கிறார் விஜய்.

Samayam Tamil 15 Aug 2020, 12:52 pm
நடிகர் விஜய் ரசிகர் பாலா என்பவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியது. அவர் அதற்கு முன்பு ட்விட்டரில் போட்டிருந்த ட்வீட்களும் விஜய் ரசிகர்களை சோகம் அடைய வைத்தது. தான் மாஸ்டர் படத்தையும் விஜய்யையும் பார்க்காமல் போகிறேன் என அவர் ட்விட் செய்திருந்தார்.
Samayam Tamil Vijay


"ஒரு மனுஷன் எவ்ளோ வலிதான் தாங்குவான் என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு.
ஒவ்வொரு தடவையும் அந்த வலியோட ஓவர்கம் பண்ணி வந்துட்டுத்தான் இருக்கன். ஆனா இப்போ உனக்கு சந்தோஷமே கிடையதுடான்னு கடவுள் நெனச்சிட்டான் போல" என்று குறிப்பிட்ட அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

21 வயதாகும் பாலா டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா காரணாமாக சொந்த ஊருக்கு திரும்பிய அவர் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமல் தான் இருந்திருக்கிறார்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி மாலை 4 மணி அளவில் தன் அறை கதவை பூட்டிக்கொண்ட அவர் அதன் பின் இறந்த நிலையில் தான் மீட்கப்பட்டு இருக்கிறார். பாலமுருகன் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் #RIPbala என்ற ஹாஸ் டேக்கில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர் ஒருவர் இப்படி தற்கொலை செய்து கொண்டதை பற்றி அறிந்து தளபதி விஜய் அவரது குடும்பத்தினரிடம் போனில் பேசி இருக்கிறார். பாலாவின் சகோதரியிடம் பேசிய விஜய், எதற்கும் தற்கொலை தீர்வாகாது என கூறி இருக்கிறார். இந்த முடிவை எப்படி எடுக்க விட்டீர்கள்?, இன்னும் நன்றாக அவரை பார்த்து இருக்கலாமே. என்ன பிரச்சனை இருந்தாலும் அவரிடம் பேசி இருக்கலாமே என்று குடும்பத்தினைரை விஜய் கேட்டிருக்கிறார். அவர்களது வருத்தத்தில் தானும் பங்கெடுத்து கொள்வதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மக்கள் இயக்கம் உங்களுக்கு உதவும் எனவும் விஜய் கூறி இருக்கிறார். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது என விஜய் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிக அதிக அளவு ரசிகர்ளை கொண்டிருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய். அவர் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். கொரோனா பிரச்சனை ஏற்பட்ட போது, விஜய் தனது ரசிகர்கள் பலருக்கும் நேரடியாக பணம் வங்கி கணக்கில் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களும் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் ஒருபுறம் இருக்க விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது மாஸ்டர் படத்துக்காக தான் காத்திருக்கிறார்கள். அந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை வந்ததால் அது தடைபட்டு இருக்கிறது. மேலும் தியேட்டர்கள் எப்போது திறக்கிறது என்பதை பொறுத்து தான் புதிய ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தான் ரசிகர்கள்அதிகம் எதிர்பார்க்கும் ட்ரெய்லரும் வெளியிடப்படும் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்