ஆப்நகரம்

40 ஆயிரம் பாடல்கள், கின்னஸ் சாதனை.. பாடகர் எஸ்பிபி-யின் நிகரில்லா சாதனைகள்

எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடகராக தன் 54 ஆண்டு கால பயணத்தில் செய்திருக்கும் சாதனைகள் பற்றி பார்ப்போம்.

Samayam Tamil 25 Sep 2020, 1:22 pm
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் இந்திய சினிமா துறையில் ஈடு இணை இல்லாத பாடகர்களில் ஒருவர். தனது தனித்துவமான குரலால் அவர் பல கோடி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். தனது காந்த குரலால் அவர் நாற்பது ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.
Samayam Tamil SPB


1966ல் சினிமா துறையில் பின்னணி பாடல்கள் பாட துவங்கிய அவர் இந்த 54 ஆண்டு கால பயணத்தில் மகத்தான சாதனைகள் பல செய்திருக்கிறார். அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்தது, ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் பெற்றது உட்பட அவரது சாதனைகள் பற்றி பட்டியலிடலாம்.

சிறு வயது முதலே அவருக்கு பாடுவதில் ஆர்வம் அதிகம், ஆனால் அவரது அப்பா கூறியதால் எஞ்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். கல்லூரி காலத்திலேயே அவர் பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். அப்படி துவங்கிய அவரது பயணம் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் யாருமே தொட முடியாத அளவு சாதனைகளுக்கு சொந்தக்காரராக அவரை மாற்றி உள்ளது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட இந்திய சினிமாவின் பல மொழிகளில் அவர் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி உள்ளார். ‘கோண்டு’ என்ற பழங்குடி இன மக்களின் மொழியில் அவர் பாடி அசத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக பாடல்கள் பாடியதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறார்.

பாடகர் மட்டுமின்றி எஸ்பிபி சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகவே எஸ்பிபி இந்திய சினிமாவில் ஜொலித்து வந்தார்.

தமிழில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடி இருக்கிறார் எஸ்பிபி. இத்தகைய சாதனையையே வேறு பாடகர்களால் தற்போது செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான். அது மட்டுமின்றி ஹிந்தியில் வெறும் 6 மணி நேரத்தில் 16 பாடல்கள் பாடி உள்ளார். மேலும் கன்னடத்தில் 12 மணி நேரத்தில் 21 பாடல்கள் பாடி இருக்கிறார் அவர்.

2001ல் அவருக்கு பத்மஸ்ரீ விருதும், 2011ல் பத்மபூஷன் விருதும் வழங்கி இந்திய அரசு அவரை கவுரவித்து உள்ளது. மேலும் 1979ல் இருந்து 1996 வரை இதுவரை 6 முறை தேசிய விருது வென்றிருக்கிறார் எஸ்பி பாலசுப்பிரமணியம். அவை மட்டும் இன்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா அரசு வழங்கும் மாநில விருதுகளையும் பல முறை வென்று இருக்கிறார் எஸ்பிபி.

இப்படி இந்திய சினிமா துறையில் எஸ்பிபி செய்திருக்கும் சாதனைகள் அளப்பரியது. இருபது வயதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா என்ற தெலுங்கு படத்தில் முதன்முதலில் பாடினார் எஸ்பி பாலசுப்பிரமணியம். தற்போது 74 வயதாகும் அவர் இப்போது பாடினாலும் அதே காந்த குரலால் அனைவரையும் கவர முடியும். இத்தனை வருடங்கள் குரலில் மாற்றம் இல்லாமல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்களை கொடுப்பதை விட பெரிய சாதனை இருக்க முடியாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்