ஆப்நகரம்

கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமி மரணம்

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமி, ரத்தப் புற்றுநோயால் சென்னையில் காலமானார்.

TNN 9 Aug 2016, 8:59 am
பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமி, ரத்தப் புற்றுநோய் காரணமாக, சென்னையில் காலமானார்.
Samayam Tamil veteran actress jyothi lakshmi is no more
கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமி மரணம்


கடந்த 1963ம் ஆண்டில் தொடங்கி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தி வந்தவர் ஜோதிலட்சுமி. பதின்ம வயதுகளிலேயே கவர்ச்சி நடிகையாக வலம்வந்த அவர், தனது இறுதிக்காலம் வரை கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஒருபோதும் தயங்கவில்லை.

எனினும், 1980களில் அவரது சகோதரி ஜெயமாலினியின் சினிமா பிரவேசம் காரணமாக, ஜோதி லட்சுமிக்கு படவாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து, சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வுபெற்றிருந்த இவர், மீண்டும் முத்து (1995), சேது (1998) போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி, பெரும் வரவேற்பை பெற்றார்.

இதன்பின், கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடாமல், பல்வேறு படங்களிலும், டிவி சீரியல்களிலும் குணசித்திர மற்றும் காமெடி நடிகையாகவும் வலம்வர தொடங்கினார் ஜோதிலட்சுமி. மிடில் கிளாஸ் மாதவன், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஜகன் மோகினி (2009), திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில், ஜோதிலட்சுமி, நகைச்சுவை நடிகையாகவும் அவர் நடித்திருந்தார்.

சுமார் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ஜோதிலட்சுமி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், ஜோதிலட்சுமி உயிரிழந்தார். இன்று பிற்பகலில், கண்ணம்மாபேட்டையில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் நடைபெறும் என, ஜோதிலட்சுமியின் மகளும், நடிகையுமான ஜோதிமீனா தெரிவித்துள்ளார். எனினும், அவரது வயது உள்ளிட்ட விவரம் கூறப்படவில்லை. மறைந்த ஜோதிலட்சுமிக்கு, சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது சினிமா பிரபலத்திற்கு அடையாளமாக, ஜோதிலட்சுமி என்ற பெயரில், சென்னை பல்லாவரத்தில் தியேட்டர் ஒன்று இயங்கிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்