ஆப்நகரம்

தெலுங்கில் உயரும் விஜய் சேதுபதி மார்க்கெட்: ஓடிடியில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது.

Samayam Tamil 29 Jul 2021, 11:31 am
கடந்த 2019 ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய 'சூப்பர் டீலக்ஸ்' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது.
Samayam Tamil Super Deluxe
Super Deluxe


2011ல் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமாக வெளியான ஆரண்ய காண்டம் படம் ரிலீசான சமயத்தில் யாரிடமும் கவனம் பெறாமலே போனது. அதன்பின்னர் படத்தை பார்த்தவர்களின் விமர்சனங்களை தொடர்ந்து பலரும் ஆரண்ய காண்டம் படத்தை தேடி தேடி பார்த்தனர். அது மட்டுமல்லாமல் சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குனர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்றது.

அதனை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமாக கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் வெளியானது. இந்த படத்திற்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் திரைக்கதை எழுதி இருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முந்தைய படம் போல் அல்லாமல் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியான சமயத்திலே விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நடிகர் ஆர்யா மீது இளம்பெண் அளித்த பண மோசடி புகாரின் நிலை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி!
இந்த படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த கதாபாத்திரத்திற்கு அண்மையில் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நடித்த பகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் கதாபாத்திரமும் விமர்சகர்களால் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி தெலுங்கில் பிரபலமான ஆஹா என்ற ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியாகவுள்ளது. தமிழை போல தெலுங்கிலும் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது. இதனால் தெலுங்கிலும் இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்