ஆப்நகரம்

தமிழை விட தெலுங்கில் அதிகம் நடிப்பது ஏன்?: வித்யுலேகா ராமன் பதில்

தமிழை விட தான் தெலுங்கு சினிமாவில் அதிக படங்கள் நடிப்பது ஏன் என்பது பற்றி வித்யுலேகா ராமன் பேசி உள்ளார்.

Samayam Tamil 9 Jul 2020, 2:14 pm
பிரபல குணச்சித்திர நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் காமெடியான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் அடுத்த சில வருடங்களாக அவர் தெலுங்கில் தான் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil Vidyu Raman


கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது நடிப்பு திறமையையும் அதிகம் பாராட்டினார்கள். அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அவர் கடந்த சில வருடங்களாக அதிக அளவில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி கேட்டதற்கு, "இது வேண்டும் என்றே எடுத்த முடிவு அல்ல. அதுவாக நடந்தது. தெலுங்கு சினிமாவுக்கு நான் தேவை பட்டேன் அதனால் என்னை அதிக படங்களில் ஒப்பந்தம் செய்தனர். சின்ன படமோ, பெரிய படமோ எனக்காக நல்ல கதாபாத்திரங்களை அவர்கள் கொடுத்தார்கள். நான் எந்த ஒரு இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டு சென்றதில்லை. என்னை தேடி வந்த வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டேன். சென்னையில் இருந்து வந்தவர் என்பதால் எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கும். தெலுங்கு சினிமாவில் எனக்கு கிடைத்த அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லையே என வருத்தமாக இருக்கும். ஆனால் எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான். ஏதோ ஒரு இடத்தில் நான் பிஸியாக இருக்கிறேன் என்பதை நினைத்து தான். தமிழில் நடிக்கிறேனோ அல்லது தெலுங்கில் நடிக்கிறேனோ அல்லது போஜ்புரியில் நடிக்கிறேனா என்பது முக்கியமில்லை. நான் சினிமாவில் நடிக்கிறேன். அவ்வளவுதான். அதற்காக நான் நன்றியுடன் இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.

தமிழில் ஏதாவது படங்களில் ஒப்பந்தம் ஆக இருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு. 'தள்ளி போகாதே' என்ற படம், 'நின்னுக்கோரி' தமிழ் ரீமேக், நடிகர் விதார்த் உடன் ஒரு படம், உமாபதி ராமையா உடன் மற்றொரு படம் என பல படங்களில் தற்போது நடித்து வருகிறேன். இந்த படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. நான் மேலும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை முடிவு பெற்ற பிறகு துவங்கும் என எதிர்பார்க்கிறேன். தெலுங்கிலும் எனக்கு இரண்டு படங்கள் இருக்கின்றன" என வித்யு ராமன் தெரிவித்துள்ளார்.

வித்யூலேகா சினிமாவில் நடிக்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் அவர் குண்டாக இருப்பதை மிகவும் மோசமாக விமர்சிக்கும் வகையில் காமெடி வசனங்கள் சினிமாக்களில் இடம் பெற்று இருந்தன. அவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வித்யுலேகா ராமன் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய எடையை அதிக அளவு குறைத்துள்ளார். தற்போது தான் 68 கிலோ மட்டும் தான் இருப்பதாக சமீபத்தில் அவர் புகைப்படம் வெளியிட்டு கூறியிருந்தார்.

மேலும் வித்யூலேகா உடல் எடையை குறைக்க துவங்கிய காலத்தில் பலரும் அவரிடம் கூறிய விஷயம் என்னவென்றால் 'நீ உடல் எடையை குறைத்தால் இப்போது கிடைத்து வரும் பட வாய்ப்புகள் இனி கிடைக்காது' என்பது தானாம். ஒருவரது திறமையை கணக்கில் கொள்ளாமல் அவர்களது தோற்றத்தை மட்டும் வைத்து தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்ற கலாச்சாரத்தை இது வெளிப்படையாக காட்டுவதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்