ஆப்நகரம்

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்? வேகமாக பரவும் புது தகவல்

தல அஜித் வலிமைக்கு பிறகு தனது அடுத்த படத்திற்காக சுதா கொங்கரா உடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது என தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 9 Sep 2020, 10:49 am
தல அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் அமைத்து ஷூட்டிங் நடந்த நிலையில், அதற்கு பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. அதன் பின் கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் விரைவில் வலிமை துவங்க வாய்ப்பு உள்ளது.
Samayam Tamil Ajith


இது ஒரு புறம் இருக்க தற்போது அஜித்தின் அடுத்த படமான தல 61 பற்றி புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அஜித் அடுத்து இறுதிச் சுற்று படப் புகழ் இயக்குனர் சுதா கொங்கரா உடன் தான் கூட்டணி சேர உள்ளார் என கூறப்படுகிறது.

இறுதிச்சுற்று படத்தின் மூலமாக மிகவும் புகழ் பெற்ற சுதா கொங்கரா, அதற்குப் பிறகு சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 30-ஆம் தேதி நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளி வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தான் சுதா கொங்கரா அஜித் உடன் கூட்டணி சேர இருப்பதாக உறுதிப்படுத்தாத தகவல் பரவி வருகிறது. பல மாதங்களுக்கு முன்பே அவர் அஜித்திடம் ஒரு ஒன்லைன் கதையை கூறி இருந்தார் என்றும் அது பிடித்திருந்ததால் அதை டெவலப் செய்யும் படி அஜித் அவரிடம் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது.

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வரவில்லை. ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக விஜய் நடித்த பிகில் படத்தினை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்றும் அவர்களே கூறியிருந்தார்கள். இதனையடுத்து அஜித்துடன் ஏஜிஎஸ் நிறுவனம் கைகோர்த்து இருப்பதாக தெரிகிறது.

அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தான் அவர். இதற்கு முன்பு ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கு காரணமாக தான் தொடர்ந்து இரண்டு படங்களில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வருகிறார். வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார்.

எச். வினோத்தின் முந்தைய படங்களைப் போலவே வலிமை படத்திலும் சண்டை காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது என தெரிகிறது. அதற்காக வெளிநாடுகளில் லொக்கேஷன் பார்த்து வைத்திருப்பதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அந்த திட்டங்களில் மாற்றம இருக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கரா தளபதி விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளது என்று கூட முன்பு தகவல் பரவியது உங்களுக்கு நினைவிருக்கலாம். விஜய்யிடம் அவர் கதை கூறினார் என்று கூட தகவல் வந்தது. ஆனால் விஜய் இறுதியாக தனது அடுத்த படத்திற்காக முருகதாஸை தான் இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்