ஆப்நகரம்

TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு?

டிக்டாக் மற்றும் 58 பிற சீன ஆப்களின் மீதான இந்திய தடை நிரந்தரமாகி உள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. இது பப்ஜி மொபைல் இந்தியா கேமின் இந்திய அறிமுகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Samayam Tamil 27 Jan 2021, 12:37 pm
டிக்டாக், விசாட், யுசிப்ரவுஸர் உட்பட 59 சீன செயலிகளை இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) நிரந்தரமாக தடை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆப்களை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசாங்கம் தடை செய்தது, இப்போது இந்த ஆப்களுக்கான தடை நிரந்தரமாகியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil TikTok Ban


முன்னதாக வெளியான தகவலின்படி, எந்தெந்த தரவுகள் சேகரிக்கப்பட்டன மற்றும் அவைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தடைசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் அரசாங்கம் பதில்களைக் கேட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற பதில்களில் இந்திய அரசாங்கம் திருப்தியடையவில்லை என்பது போல் தெரிகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 200 க்கும் மேற்பட்ட ஆப்கள் தடை செய்யப்பட்டன. அதில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் கேம் ஆன PUBG மொபைலும் அடக்கம்.

PUBG மொபைல் தடை செய்யப்பட்டாலும் கூட பப்ஜி மொபைல் இந்தியா அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் புதிய பணியாளர்களை பணியமர்த்திய பின்னர் பப்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய, இந்தியா ஒன்லி எடிஷன் கேமை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலைமையை சரிசெய்ய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், தகவல் அறியும் சட்டம் வழியாக கிடைக்கப்பெற்ற பதில்களின்படி, பப்ஜி மொபைலின் மறுதொடக்கத்திற்கு MeitY எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்கிற உண்மை தெரிய வந்தது.

நினைவூட்டும் வண்னம், கடந்த செப்டம்பர் மாதத்தில் நூற்றுக்கணக்கான பிற சீன ஆப்களுடன் PUBG கேமையும் MEITY தடைசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தகவல் அறியும் கேள்விக்கு (RTI) பதிலளித்த MEITY, “PUBG-ஐ மறுதொடக்கம் செய்ய MEITY எந்த அனுமதியையும் வழங்கவில்லை” என்று கூறியுள்ளது.

குறிப்பிட்ட தகவல் அறியும் கேள்வியானது கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாக இன்சைட்ஸ்போர்ட் (Insidesport) தெரிவித்துள்ளது. ஈ-ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் GEM Esports அதன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் குறிப்பிட்ட ஆர்டிஐ பதிலை ஷேர் செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

"மரியாதைக்குரிய சார் / மேம், கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில், உங்கள் துறையின் (MEITY) ஆலோசனையுடன் இந்திய அரசு பல்வேறு சீன ஆப்களை தடை செய்தது. அவற்றில் ஒன்று பப்ஜி மொபைல் கேம். இப்போது, இந்த கேம் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகும் என்றுபல செய்திகளில் அடிபடுகிறது.

இது குறிப்பாக இந்திய மக்களுக்காக தயாரிக்கப்படுகிறது என்றும், இது நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. உங்கள் துறை குறிப்பிட்ட இதுபோன்ற ஏதேனும் அனுமதியை வழங்கியிருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்" என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட கேள்விக்கு MEITY, "PUBG-ஐ தொடங்க MEITY எந்த அனுமதியையும் வழங்கவில்லை" என்று பதில் அளித்துள்ளது.

இந்நிலைப்பாட்டில், டிக்டாக், விசாட் போன்ற சீன ஆப்களின் மீதான நிரந்தர தடையானது, பப்ஜி மொபைல் இந்தியா நாட்டில் மீண்டும் அறிமுகமாவது சாத்தியமில்லை என்பது போல் தெரிகிறது. "நாங்கள் இந்த அறிவிப்பை மதிப்பீடு செய்கிறோம், அதற்கு பொருத்தமானதாக பதிலளிப்போம்.

ஜூன் 29, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கிய முதல் நிறுவனங்களில் டிக்டாக் ஒன்றாகும். உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம், மேலும் அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய எந்தவொரு கவலையும் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எங்கள் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வது எங்கள் முன்னுரிமையாக உள்ளது” என்று டிக்டாக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்ட் தளத்திடம் கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்