ஆப்நகரம்

பிக் பாஸ் 4 போட்டியாளர் ரேகா பற்றிய முக்கிய தகவல்கள்

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக வந்திருக்கும் ரேகா பற்றிய சில முக்கிய தகவல்கள்.

Samayam Tamil 4 Oct 2020, 11:50 pm
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இன்று கோலாகலமாக துவங்கியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் தற்போது ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து, அவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வருகிறார். அந்த வகையில் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது, 80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்த ரேகா பிக் பாஸ் 4 வீட்டில் நுழைந்துள்ளார்.
Samayam Tamil Bigg Boss 4 contestant Rekha


கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். ஜோஸப்பின் என்ற இயற்பெயர் கொண்ட ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றுள்ளார்.

இவர் தமிழில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்து வெளியான புன்னகை மன்னன் திரைப்படம் இவருக்கு கோலிவுட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மலையாளத்தில் நடித்து வெளியான தஷரதம் திரைப்படத்திற்கு, இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்த 100% காதல் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து அவர், தற்போது பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் ரேகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 3 சீசன்களிலும் இளம் போட்டியாளர்களே வென்றுள்ள நிலையில், இம்முறை அது மாற்றியமைக்கப்படுமா. 4வது சீசனில் ரேகா வெல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பது போகப்போகத்தான் தெரியும்.

சீனியர் நடிகையான ரேகா பிக் பாஸ் 4 வீட்டிற்கு செல்வதாக முதலில் இருந்தே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. புன்னகை மன்னன் படம் மூலம் அப்போது உள்ள ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது உள்ள இளம் தலைமுறையினரையும் கவர்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி